Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நோயாளிகளுக்கு தொந்தரவு: நடிகர் பகத் பாசிலுக்கு சிக்கல்

நோயாளிகளுக்கு தொந்தரவு: நடிகர் பகத் பாசிலுக்கு சிக்கல்

நோயாளிகளுக்கு தொந்தரவு: நடிகர் பகத் பாசிலுக்கு சிக்கல்

நோயாளிகளுக்கு தொந்தரவு: நடிகர் பகத் பாசிலுக்கு சிக்கல்

ADDED : ஜூன் 30, 2024 12:17 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

எர்ணாகுளம்: கேரளாவில், அங்கமாலி தாலுகா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், பிரபல நடிகர் பகத் பாசில் தயாரிக்கும் பைங்கிளி திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டபோது நோயாளிகளுக்கு தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, மாநில மனித உரிமைகள் கமிஷன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர், இயக்குனர் தேவன் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் பைங்கிளி என்ற மலையாள படத்தை தயாரித்து வருகிறார்.

எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி தாலுகா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், பைங்கிளி படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பு நடந்தது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, கேரள மனித உரிமைகள் கமிஷன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து, மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:

அவசர சிகிச்சை பிரிவில், நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, மின் விளக்குகளை அணைத்து, இரு நாட்களாக, பைங்கிளி படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

நோயாளிகளுக்கு இடையூறாக படக்குழு நடந்து கொண்ட விதம் ஏற்க முடியாதது. இது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் கமிஷன் தாமாக முன்வந்து தயாரிப்பாளர் பகத் பாசில் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்கிறது.

இந்த விவகாரம் குறித்து, எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி மற்றும் அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அங்கமாலி தாலுகா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், படப்பிடிப்பு நடந்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சுகாதாரத் துறை இயக்குனருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us