சத்தீஸ்கரில் காங்., ஆட்சி காலத்தில் ரூ.660 கோடி ஊழல் நடந்தது அம்பலம்
சத்தீஸ்கரில் காங்., ஆட்சி காலத்தில் ரூ.660 கோடி ஊழல் நடந்தது அம்பலம்
சத்தீஸ்கரில் காங்., ஆட்சி காலத்தில் ரூ.660 கோடி ஊழல் நடந்தது அம்பலம்
ADDED : ஜூன் 30, 2024 12:14 AM

ராய்பூர்: சத்தீஸ்கரில் முந்தைய காங்., ஆட்சி காலத்தில், 660 கோடி ரூபாய்க்கு முறைகேடாக உயர் ரக மருத்துவ உபகரணங்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது.
சத்தீஸ்கரில் தற்போது விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இதற்கு முன், பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
இடவசதி இல்லை
அப்போது, கடந்த 2022 - 23 மற்றும் 2023 - 24ம் நிதியாண்டுகளில் சுகாதாரத் துறையில் வாங்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக சமீபத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவில், பட்ஜெட்டில் நிதி எதுவும் ஒதுக்காமல், 660 கோடி ரூபாய்க்கு உயர் ரக மருத்துவ உபகரணங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வாங்கியது அம்பலமாகி உள்ளது.
மாநிலத்தில் உள்ள 776 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்த பொருட்கள் வாங்கப்பட்ட நிலையில், இதில் பாதிக்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களில், அவற்றை சேமித்து வைப்பதற்கு கூட இடவசதி இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
தேவையான பொருட்கள் குறித்து எந்த அடிப்படை ஆய்வும் மேற்கொள்ளாமல், அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் பொதுவான வகையில், ஒரே மாதிரியான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுகாதாரத் துறையின் கண்மூடித்தனமான இந்த செயலால், அதிக விலைக்கு வாங்கப்பட்ட எக்ஸ் - ரே மெஷின், சி.டி. ஸ்கேன் இயந்திரம் போன்றவை பயனற்று கிடப்பதாக சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, ராய்பூரில் உள்ள பட்கான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஹர்ஷிதா தேகம் கூறுகையில், ''சோனோகிராபி, எக்ஸ் ரே இயந்திரங்கள் எங்கள் சுகாதார நிலையத்துக்கு வாங்கப்பட்டுஉள்ளன.
''ஆனால், சிறப்பு டாக்டர்கள் யாரும் இல்லாததால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. இதற்கான உரிய நிபுணர்களை நியமிக்கும் வரையில், அவற்றை உபயோகிக்க முடியாது,'' என்றார்.
அழைப்பு
உரிய முறையில் நிதி ஒதுக்கப்படாமல் உபகரணங்கள் வாங்கப்பட்டது, மாநிலத்தின் சுகாதார அமைப்பில் கொள்முதல் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிஉள்ளது.
இதையடுத்து, மாநில மருத்துவ சேவைகள் கழகம், சுகாதார சேவைகள் இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் கள அளவிலான சுகாதார வசதிகளை உள்ளடக்கிய விரிவான தணிக்கைக்கு, சத்தீஸ்கர் மாநில முதன்மை கணக்காளர் ஜெனரல் அழைப்பு விடுத்துள்ளார்.