கணவனுக்கு வீட்டிலேயே மது: மகளிருக்கு மந்திரி யோசனை
கணவனுக்கு வீட்டிலேயே மது: மகளிருக்கு மந்திரி யோசனை
கணவனுக்கு வீட்டிலேயே மது: மகளிருக்கு மந்திரி யோசனை
ADDED : ஜூன் 29, 2024 11:59 PM

போபால்: “வெளியில் சென்று மது அருந்தும் கணவரை, பெண்கள் தங்கள் வீட்டிலேயே குடும்பத்தினர் முன்னிலையில் மது அருந்தும்படி கேட்டுக்கொள்ளுங்கள். இதனால் வெட்கப்பட்டு, அவர்கள் மெதுவாக குடிப்பழக்கத்தை விட்டுவிடுவர்,” என மத்திய பிரதேச அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா அறிவுரை வழங்கினார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள போபாலில் சமீபத்தில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், மாநில அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹா பேசினார்.
அவர் பேசுகையில், “குடிக்கு அடிமையான ஒருவரை அதில் இருந்து மீட்பதில், அவரது வீட்டைச் சேர்ந்த தாய், தங்கை போன்ற பெண்களின் முயற்சி பெரும் பங்கு வகிக்கிறது. முதலில் கணவரிடம் வெளியில் சென்று குடிக்கக் கூடாது என கூறுங்கள். அப்படியே குடிக்க விரும்பினால், வீட்டில் எங்கள் முன்னாலேயே குடியுங்கள் என்று கூறுங்கள். இதனால் அவர்கள் குடிக்கும் அளவு குறையும்.
“குழந்தைகள் முன்னே குடிக்க அசிங்கப்படுவர். குழந்தையும் எதிர்காலத்தில் குடிக்க துவங்கும் என்ற அச்சம் ஏற்படும். இதனால் அவர்கள் குடியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவர்,” என்றார்.
இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவுரைக்கு மத்திய பிரதேச மகளிர் கமிஷன் உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சங்கீதா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சரின் அறிவுரையை பின்பற்றினால் வீட்டில் சண்டை தான் ஏற்படும். இந்த கருத்துக்கு அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். வீட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு முக்கிய காரணமே மது தான். மத்திய பிரதேச மகளிர் கமிஷனில் மதுபோதையில் கணவர் அடித்ததாக 17,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன,” என்று கூறினார்.