ராமர் கோவிலில் நீர்க்கசிவு ஆறு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ராமர் கோவிலில் நீர்க்கசிவு ஆறு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ராமர் கோவிலில் நீர்க்கசிவு ஆறு அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூன் 29, 2024 11:56 PM

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பெய்த பலத்த மழையால், ராமர் கோவில் உட்பட பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதை அடுத்து, அதற்கு காரணமான ஆறு அதிகாரிகளை மாநில அரசு 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் எழுப்பப்பட்டது.
இந்த கோவிலின் பிராண பிரதிஷ்டை விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜன., 22ல் கோலாகலமாக நடந்தது.
கடந்த சில நாட்களாக அயோத்தியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ராமர் கோவில் செல்லும் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. கோவிலுக்கு செல்லும் முக்கிய பாதையில், 14 கி.மீ., துாரத்துக்கு குழிகள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கின.
அதுபோல், ராமர் கோவிலின் கருவறை கூரையில் இருந்து நீர் கசிந்ததால் கோவிலின் உள்ளேயும் மழைநீர் தேங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
'இது மழையால் ஏற்பட்ட கசிவு அல்ல. முதல் தளத்தில் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணியால் தண்ணீர் கசிந்தது' என, கோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
'கோவில் கும்பாபிஷேகம் செய்து ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில், நீர்க்கசிவு ஏற்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மாநில அரசின் துரித நடவடிக்கைகளால் கோவில் வளாகம் மற்றும் பாதைகளில் தேங்கியிருந்த தண்ணீர் உடனடியாக அகற்றப்பட்டது.
குண்டும் குழியுமாக இருந்த சாலைகளும் சீரமைக்கப்பட்டன.
இந்நிலையில், அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக் குறைவால், கோவில் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதற்கு காரணமான ஆறு பேரை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.