மாற்றியமைக்கப்படுகிறது நிடி ஆயோக்: கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு
மாற்றியமைக்கப்படுகிறது நிடி ஆயோக்: கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு
மாற்றியமைக்கப்படுகிறது நிடி ஆயோக்: கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:02 AM

புதுடில்லி: நிடி ஆயோக் அமைப்பை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட, 15 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது, நிடி ஆயோக் அமைப்பு. அதற்கு முன், 65 ஆண்டுகளாக இருந்த திட்டக் கமிஷனுக்கு பதிலாக, 2015ல், இந்த அமைப்பை, பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கினார்.
பிரதமர் மோடி தலைமையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாறியுள்ளன. அதன்படி, நிடி ஆயோக் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதமர் மோடி இதன் தலைவராக தொடர்கிறார். சுமன் பெரி, துணைத் தலைவராக உள்ளார். அலுவல் சார் உறுப்பினர்களாக, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன் இடம் பெற்றுள்ளனர்.
விஞ்ஞானி வி.கே. சரஸ்வத், வேளாண் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தைகளுக்கான மருத்துவர் வி.கே. பால், பொருளாதார நிபுணர் அரவிந்த் வீரமணி ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நட்டா, வீரேந்திர குமார், ராவ் இந்தர்ஜித் சிங், ஜூவல் ஓரம், அன்னபூர்ணா தேவி இடம்பெற்றுஉள்ளனர்.
இதைத் தவிர கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான குமாரசாமி, ஜிதன்ராம் மஞ்சி, ராஜிவ் ரஞ்சன் சிங், கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, சிராக் பஸ்வான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.