ரூ.300 கோடி முறைகேடு துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
ரூ.300 கோடி முறைகேடு துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
ரூ.300 கோடி முறைகேடு துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
ADDED : ஜூலை 20, 2024 06:47 AM

பெங்களூரு: ''பா.ஜ., ஆட்சியில் 300 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., ஆட்சியில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை முதல்வர்களாக இருந்தபோது பல்வேறு துறைகளில் 300 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து நாங்கள் நிச்சயமாக விசாரணை நடத்துவோம்.
அவர்கள் செய்த முறைகேடு குறித்த ஆவணங்களை சட்டசபை கூட்டத்தில் வெளியிடுவோம். எந்தெந்த அமைச்சர்கள், வாரிய தலைவர்கள் முறைகேட்டின் பின்னணியில் இருந்தனர் என்பதை, மாநில மக்களுக்கு தெளிவாக எடுத்து சொல்லுவோம்.
பா.ஜ.,வில் முதல்வர் பதவிக்கு 2,500 கோடி ரூபாய்; அமைச்சர் பதவிக்கு 100 கோடி ரூபாய் என்று, அந்த கட்சி எம்.எல்.ஏ., எத்னால் கூறினார். அது பற்றி ஏன் விசாரணை நடக்கவில்லை.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணம், தெலுங்கானாவுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதை விசாரிக்க சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம். இந்த முறைகேட்டில் வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது.
இந்த ஊழலுக்கும், முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிகாரிகள் தவறு செய்தால், முதல்வர் எப்படி பொறுப்பேற்க முடியும். ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வங்கி அதிகாரி ஒருவர், கடன் வழங்கி உள்ளார். இதற்கு மத்திய நிதி அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.
சட்டசபை நடவடிக்கைகள் பற்றி எதிர்க்கட்சியினருக்கு எதுவும் தெரிவதில்லை. நாங்கள் பேச அனுமதித்தோம். முதல்வரை பேச அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அரசு ஊழலில் ஈடுபடவில்லை. சில அதிகாரிகள் தவறு செய்ததை, அரசியல்ரீதியாக எங்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கூறினார்.