தொழிற்சாலைக்கு உள்கட்டமைப்பு மத்திய குழு விரைவில் தங்கவயல் வருகை
தொழிற்சாலைக்கு உள்கட்டமைப்பு மத்திய குழு விரைவில் தங்கவயல் வருகை
தொழிற்சாலைக்கு உள்கட்டமைப்பு மத்திய குழு விரைவில் தங்கவயல் வருகை
ADDED : ஜூன் 23, 2024 06:42 AM

கோலார்: ''தங்கவயலில் தொழில் வளர்ச்சிக்கும், கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்த வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு குறித்து பரிசீலிக்க மத்திய அரசின் தொழில்துறை அமைச்சக அதிகாரிகளின் குழு வருகை தருவர்,'' என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கோலார் மாவட்டத்தில் கோலார் வழியாக குப்பம் -- பாகேபள்ளி நெடுஞ்சாலை; கோலார் - மதனபள்ளி சாலை; ஹொஸ்கோட் -- தேவனஹள்ளி சாலை அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக மூன்று திட்டங்களை நிறைவேற்றுமாறு கோரியுள்ளேன். இது கோலார் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.
தங்கவயலில் 10,000 ஏக்கர் நிலம் மத்திய அரசு வசம் உள்ளது. இதில் தொழிற் சாலைகள் ஏற்படுத்தும் திட்டம் உள்ளது. மத்திய கனரக தொழிற்சாலைத்துறை அமைச்சராக குமாரசாமி பதவியேற்றுள்ளார். அவரால் கோலார் மாவட்டத்தில் தொழில் வளம் பெருகும்.
தங்கவயல் - சென்னை எக்ஸ்பிரஸ் காரிடார் சாலை 180 கி.மீ., துாரமும், சர்வதேச விமான நிலையத்திற்கு 70 கி.மீ., துாரம் மட்டுமே பணிகள் பாக்கி உள்ளது.
தொழிற்சாலைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு மிக முக்கியம். இதுகுறித்து கனரக தொழில்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, தங்கவயலில் கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்துவது குறித்து பேசியிருக்கிறேன். அமைச்சக அதிகாரிகள் குழு, தங்கவயலில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த தேவையான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்புகள் குறித்து பரிசீலிக்க வருவதாக உறுதி அளித்துள்ளனர்.
எனவே, தங்கவயலில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தங்கவயல் நகராட்சியும், தொகுதி எம்.எல்.ஏ.,வும் கவனம் செலுத்த வேண்டும்.
அப்போது தான் மத்திய அரசின் உத்தரவில் தனியார் கூட்டமைப்புடனோ அல்லது தனியார் நிறுவனங்களோ கனரக தொழிற்சாலைகள் ஏற்படுத்த வசதியாகஇருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.