Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்

ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்

ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்

ரேணுகாசாமி கொலை நடந்த 'ஷெட்' உரிமையாளருக்கு சிக்கல்

ADDED : ஜூன் 23, 2024 06:42 AM


Google News
ரேணுகாசாமி கொலை நடந்த ஷெட் உரிமையாளர் ஜெயண்ணா. இவரிடம் ரேணுகாசாமி கொலை தொடர்பாக போலீசார் விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார்.

கொலை நடந்த பின்னர், ஜெயண்ணா ஷெட்டுக்கு வந்ததும், கொலை குறித்து யாரிடமும் கூறக்கூடாது என, ஷெட் ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு, போலீசார் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கிடையில், கொலை வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்டதும், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் வினித் குறித்து, சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டனர். இதையடுத்து சமூக வலைதள பக்கங்களை விஜயலட்சுமி முடக்கினார்.

தர்ஷன் குடும்ப உறுப்பினர்களை பற்றி, ஊடகத்தினர் செய்தி வெளியிட, நீதிமன்றத்தில் இருந்து விஜயலட்சுமி தடை வாங்கி உள்ளார்.

கடவுள் புத்தி கொடுக்கட்டும்!

எனது மகன் ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி போலீசில் புகார் செய்திருக்கலாம். ஆனால் அவரை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஊடகங்கள் வெளியிடும் செய்தியை பார்க்கும்போது, என் மகனை கொலை செய்தவர்களிடம் மனிதத் தன்மை இல்லை என்று தெரிகிறது. எனது மகன் அணிந்திருந்த நகைகளை, போலீசார் மீட்டுக் கொடுத்துள்ளனர். இந்த வழக்கில் அரசு, முதல்வர் நேர்மையாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மகனை கொன்றவர்களுக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்.

காசிநாத், ரேணுகாசாமியின் தந்தை

குடும்பத்தினர் கண்ணீர்

கொலை வழக்கில் கைதாகி உள்ள தர்ஷன், பவித்ரா ஆகியோர் தங்களுக்காக வாதாட, பெரிய வக்கீல்களை நியமித்து உள்ளனர். ஆனால் கொலை வழக்கில் கைதான சிலரின் குடும்ப பின்னணி, மிகவும் ஏழ்மையானது. இதனால் கைதானவர்களை ஜாமினில் எடுக்க பணம் இன்றியும், சிறைக்கு சென்று அவர்களை பார்க்க முடியாமலும் உள்ளனர்.'தர்ஷனுக்காக கொலை செய்துவிட்டனர். அவர்களை காப்பாற்ற, நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்களிடம் வசதி இல்லாததால், எப்படி வெளியில் கொண்டு வருவது என தெரியவில்லை' என, கண்ணீருடனும், ஆதங்கத்துடனும் கூறுகின்றனர்.



மனநல சிகிச்சை?

மனநல ஆலோசகர் சந்திரிகா கூறியதாவது:கடந்த ஜனவரியில், நான் தர்ஷனை பார்த்தபோது, அவருக்கு மனதளவில் ஏதோ பிரச்னை இருப்பது எனக்கு தெரிந்தது. அதாவது, அவரது மனதுக்குள் நிறைய நெகட்டிவான விஷயங்கள் ஓடிக்கொண்டிருப்பது, அவரைப் பார்த்ததும் எனக்கு தெரிந்தது. எனக்கு தெரிந்த சில கன்னட திரைப்பட பிரபலங்களிடம், மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி தர்ஷனிடம் கூறுங்கள் என்று பரிந்துரைத்தேன். தற்போது நெகட்டிவ்வான விஷயங்களால், கொலை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தாய், தம்பியின் ஆதரவு இல்லை. மனைவி விஜயலட்சுமி மட்டும் உறுதுணையாக உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.



நடிகர் ரம்யா வாழ்த்து

நடிகை ரம்யா தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'சமூகத்தில் அதிகாரம் மிக்க நபர்களால் பெண்கள், ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர். ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய, போலீசாருக்கு என் வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.



தர்ஷன் சம்பளம் ரூ.25 கோடி?

தர்ஷன், 1997ல், மகாபாரதா என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் நடிகராக அறிமுகமான பின்னர் நடித்த முதல் 10 படங்களில், சம்பளமாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கி உள்ளார். அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று, ரசிகர் பட்டாளம் உயர்ந்த பின்னர், சம்பளத்தை கூட்டி உள்ளார்.கடைசியாக அவர் நடித்த காட்டேரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பின்னர், நான்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் சம்பளமாக 22 கோடி முதல் 25 கோடி ரூபாய் வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us