சர்ச்சை 'வீடியோ'வை நீக்க கெஜ்ரி மனைவிக்கு உத்தரவு
சர்ச்சை 'வீடியோ'வை நீக்க கெஜ்ரி மனைவிக்கு உத்தரவு
சர்ச்சை 'வீடியோ'வை நீக்க கெஜ்ரி மனைவிக்கு உத்தரவு
ADDED : ஜூன் 16, 2024 01:13 AM
புதுடில்லி, டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தலுக்காக சமீபத்தில் ஜாமினில் வந்த அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கைதை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்தில் அவர் அளித்த விளக்கம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இதை, கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை எதிர்த்து டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வைபவ் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'டில்லி உயர் நீதிமன்றத்தின் வீடியோ கான்பரன்ஸ் விதிகளை மீறி, அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இது ஒரு சதிச் செயல். இதில் ஈடுபட்ட சுனிதா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என வைபவ் சிங் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என சுனிதாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 'எக்ஸ்' சமூக வலைதளம், 'மெட்டா, யு டியூப்' நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.