மத்திய பட்ஜெட் ஜூலை 22 ல் தாக்கல்?
மத்திய பட்ஜெட் ஜூலை 22 ல் தாக்கல்?
மத்திய பட்ஜெட் ஜூலை 22 ல் தாக்கல்?
UPDATED : ஜூன் 14, 2024 02:58 PM
ADDED : ஜூன் 14, 2024 02:28 AM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் துவங்கியதால், நிதி அமைச்சக அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. இதனிடையே, மத்திய பட்ஜெட் ஜூலை 22ம் தேதி தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூன்றாவது முறை
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, 18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர், 24ல் துவங்கி, ஜூலை 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, ஜூலை மூன்றாவது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பட்ஜெட் தயாரிப்பு பணி மிக ரகசியமாகவே நடக்கும்.
இந்தாண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதால், நிதி அமைச்சகம், தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 - 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
சாதனை
ஏற்கனவே, ஐந்து முழு பட்ஜெட், ஒரு இடைக்கால பட்ஜெட் என, ஆறு பட்ஜெட்களை தொடர்ந்து தாக்கல் செய்து, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தற்போது, ஏழாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து, அந்தச் சாதனையை முறியடிக்க உள்ளார்.
நாட்டின் முதல் பெண் ராணுவ அமைச்சர், முதல் பெண் முழுநேர நிதியமைச்சர் என, பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
மேலும், இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
தற்போது மத்தியில் கூட்டணி அரசு அமைந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் சமபலத்தில் உள்ளன. அதனால், அவருடைய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.