Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'டேங்கர் லாரிகளால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை'

'டேங்கர் லாரிகளால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை'

'டேங்கர் லாரிகளால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை'

'டேங்கர் லாரிகளால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை'

ADDED : ஜூன் 14, 2024 02:25 AM


Google News
புதுடில்லி:'டேங்கர் மாபியா ஹரியானாவில் உள்ள யமுனை ஆற்றுப்பகுதியில் செயல்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் டில்லி குடிநீர் வாரியத்துக்கு இல்லை. தனியார் டேங்கர் லாரிகளால் டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் டில்லி அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, ஹிமாச்சல பிரதேச அரசுக்கு யமுனை ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி டில்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி அரசு சார்பில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மாநில அரசு கூறியிருப்பதாவது:

டேங்கர் மாபியா, டில்லி குடிநீர் வாரியம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இல்லை. ஹரியானாவின் யமுனை ஆற்றங்கரைப் பகுதியில் டேங்கர் மாபியா உள்ளது. அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் டில்லி குடிநீர் வாரியத்துக்கு இல்லை.

மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட குழாய்களுடன் இணைக்கப்படாத பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் தேவை உள்ளது. டில்லி குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான டேங்கர் லாரிகள், தனியார் டேங்கர்கள் மூலம் தினமும் 5 முதல் 6 மில்லியன் கேலன்கள் தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. இது மொத்த வினியோகத்தில் 0.5 சதவீதம் மட்டுமே.

தண்ணீர் டேங்கர்களின் இருப்பை மேம்படுத்த குடிநீர் வாரியம் முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு தன் அபிடவிட்டில் கூறியதுடன் தண்ணீர் வீணாவதை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அது பட்டியலிட்டுள்ளது.

டேங்கர்கள் மூலம் கொண்டு செல்ல முடியும் அதே தண்ணீரை ஏன் குழாய் மூலம் வழங்க முடியாது என, நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us