ராஜ்கோட் விமான நிலையத்தில் கூரை சரிந்து விழுந்து விபத்து
ராஜ்கோட் விமான நிலையத்தில் கூரை சரிந்து விழுந்து விபத்து
ராஜ்கோட் விமான நிலையத்தில் கூரை சரிந்து விழுந்து விபத்து
ADDED : ஜூன் 30, 2024 12:13 AM

ராஜ்கோட்: டில்லியைத் தொடர்ந்து குஜராத் விமான நிலையத்தின் கூரை நேற்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. டில்லி, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
டில்லியில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்த போது சூறாவளி காற்று வீசியது. இதில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம் - 1ன் நுழைவாயிலில் இருந்த கூரை, நேற்று முன்தினம் திடீரென சரிந்து விழுந்தது.
இந்த விபத்தில் டாக்சி டிரைவர் ஒருவர் பலியானார்; ஆறு பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், குஜராத்தில் பெய்து வரும் மழையால் ராஜ்கோட் விமான நிலையத்தின் நுழைவாயிலில் துணியால் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகளில் தண்ணீர் தேங்கியது.
இதை அப்புறப்படுத்தும் முயற்சியின் போது, கூரை நேற்று திடீரென சரிந்து விழுந்தது.
அப்போது, பயணியர் யாரும் அங்கு இல்லாததால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சரிந்து விழுந்த கூரையை சரிசெய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.
முன்னதாக, கடந்த 27ம் தேதி மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள தும்னா விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் அங்கிருந்த கார் நொறுங்கியது. ம.பி., டில்லியைத் தொடர்ந்து குஜராத்திலும் மேற்கூரை சரிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.