டிரங்க் பெட்டிக்கு பதிலாக டிராலி பை ரயில் டிரைவர்களுக்கு வழங்க திட்டம்
டிரங்க் பெட்டிக்கு பதிலாக டிராலி பை ரயில் டிரைவர்களுக்கு வழங்க திட்டம்
டிரங்க் பெட்டிக்கு பதிலாக டிராலி பை ரயில் டிரைவர்களுக்கு வழங்க திட்டம்
ADDED : ஜூலை 26, 2024 03:53 AM

புதுடில்லி: ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகளுக்கு, டிரங்க் பெட்டிகளுக்கு பதிலாக, 'டிராலி பேக்' வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் பயணத்தின்போது, ரயில் தொடர்பான சில சாதனங்கள் மற்றும் தங்களுடைய சொந்த பொருட்களை எடுத்துச் செல்வதற்காக, பெரிய தகரத்திலான டிரங்க் பெட்டிகளை உடன் எடுத்து செல்வர். சாதாரணமாக இந்த பெட்டி, 20 கிலோ எடை உள்ளதாக இருக்கும்.
எதிர்ப்பு
ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகளுக்கு, டிரங்க் பெட்டிகளுக்கு பதிலாக, கைகளால் இழுத்து செல்லக்கூடிய டிராலி பேக் வழங்கும் திட்டம், 2006ல் உருவாக்கப்பட்டது. இதை செயல்படுத்துவது தொடர்பாக, 2007ல் ரயில்வே வாரியம் விரிவான நடைமுறைகளை மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் எதிர்ப்பால், இது நடைமுறைபடுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சோதனை அடிப்படையில், வடக்கு ரயில்வே மற்றும் தென் மத்திய ரயில்வேயில், இந்த திட்டம் 2-018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு வரவேற்பு இருந்ததால், 2022ல் இதை நாடு முழுதும் அமல்படுத்த ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதன்படி டிராலி பேக்குகளை, ரயில்வே மண்டலங்கள் வாங்கி தரலாம் அல்லது ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள் தாங்களாகவே வாங்கிக் கொண்டால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, 5,000 ரூபாய் படியாக வழங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், ரயில் டிரைவர்கள் மற்றும் கார்டுகள், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உட்பட பல அமைப்புகளில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கமாக, இந்த பெட்டிகளை ரயிலுக்கு எடுத்து செல்லவும், திருப்பி கொண்டு வரவும் போர்ட்டர்கள் பயன்படுத்தப்படுவர்.
ஒப்பந்த அடிப்படையில், அவர்களுக்கு அதற்கான தொகை வழங்கப்பட்டு வந்தது. தங்களை போர்ட்டர்கள் வேலையை செய்ய வைக்கும் முயற்சியாக உள்ளதால், டிராலி பேக் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேல்முறையீடு
மேலும், அவசர காலத்தில் பயன்படுத்த, டெட்டனேட்டர்கள் எடுத்து செல்லப்படும். டிரங்க் பெட்டியில் இருந்தால் தான், அது பாதுகாப்பாக இருக்க முடியும். இல்லாவிட்டால், ரயிலில் இருந்து திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் காரணம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், ரயில்வேயின் உத்தரவில் தலையிட மறுத்து, பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, டிராலி பேக் வாங்குவது தொடர்பாக, ரயில்வே வாரியம் சமீபத்தில் மண்டல அலுவலகங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ரயில் டிரைவர்கள், கார்டுகள் சங்கம் முடிவு செய்துள்ளது.