'சொன்னது நீங்கள் தானே' சிவகுமார் கண்டுபிடிப்பு
'சொன்னது நீங்கள் தானே' சிவகுமார் கண்டுபிடிப்பு
'சொன்னது நீங்கள் தானே' சிவகுமார் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 02, 2024 06:04 AM

பெங்களூரு: ''மத்திய முன்னாள் அமைச்சர் பசனகவுடா பாட்டீல் எத்னால் தான், தன் கட்சியான பா.ஜ., மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். முதல்வர் பதவிக்கு 2,500 கோடி ரூபாய், அமைச்சர் பதவிக்கு 100 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென கூறியது அவர்கள் தானே?'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
நாட்டிலேயே கர்நாடக பா.ஜ., ஊழல் கட்சியாகும். தங்கள் ஊழலை, அவர்களே அம்பலப்படுத்துகின்றனர். இப்போது, நாங்கள், எங்கள் சக்தியை காண்பிப்போம். நாங்கள் வெளியிட்ட விளம்பரங்கள் குறித்து, பா.ஜ.,வினர் புகார் அளித்துள்ளனர். தேவையின்றி நாங்கள் விளம்பரம் வெளியிடவில்லை.
பா.ஜ., தலைவர்கள், அன்றைய அமைச்சர்கள் கூறியதன் அடிப்படையில், அக்கட்சி அரசின் ஊழல்கள் குறித்து, நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டோம். 'காசு இருந்தால் பதவி' என்ற லட்சம், ஏ.சி., பதவிக்கு 1.50 கோடி ரூபாய், டெபுடி எஸ்.பி.,க்கு 80 லட்சம் ரூபாய், இன்ஸ்பெக்டருக்கு 40 லட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரை, உதவி பொறியாளர் பதவிக்கு 80 லட்சம் ரூபாய், உதவி வன அதிகாரி பதவிக்கு 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, கூறப்பட்டது. இதன் அடிப்படையில் தான், காங்கிரஸ் விளம்பரம் வெளியிட்டது.
போனால் போகட்டும் என, நாங்கள் பா.ஜ.,வினரை விட்டு வைத்திருந்தோம். அவர்களே புகார் அளித்த பின், நாங்கள் மவுனமாக இருக்க முடியுமா? பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்பதால், ராகுலின் பெயரை சேர்த்துள்ளனர்.
பசனகவுடா பாட்டீல் எத்னால், தன் கட்சியான பா.ஜ., மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார். முதல்வர் பதவிக்கு 2,500 கோடி ரூபாய், அமைச்சர் பதவிக்கு 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என, கூறியது பா.ஜ.,வினர் தானே?
இவ்வாறு அவர்கூறினார்.