குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: வாரிய தலைவர் உத்தரவு
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: வாரிய தலைவர் உத்தரவு
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: வாரிய தலைவர் உத்தரவு
ADDED : ஜூலை 09, 2024 04:58 AM

பெங்களூரு : ''மழை பெய்வதால், குடிநீர் வினியோகிப்பதில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மக்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று, புகார்களை கேட்டறிய வேண்டும்,'' என, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் உத்தரவிட்டார்.
பெங்களூரு குடிநீர் வாரிய மத்திய அலுவலகத்தில், அதிகாரிகள், பொறியாளர்களுடன், குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர், நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அவர் பேசியதாவது:
ஜூன் முதல் வாரம், காவிரி ஐந்தாம் கட்ட திட்டத்தை ஆய்வு செய்யும் பணிகள் நடந்தன. இதற்காக பெங்களூரின் பல இடங்களில், குடிநீர் நிறுத்தப்பட்டது குறித்து, புகார்கள் வருகின்றன.
மழைநீரால் சாக்கடைகள் நிரம்பி, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதாக தகவல் வந்துள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காண, அதிகாரிகள் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.
கோடை காலத்தில் குடிநீர் வினியோகிப்பில், நாட்டின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி அடைந்தோம். அதேபோன்று மழைக்காலத்தை திறமையாக எதிர்கொள்ள வேண்டும். மண்டல தலைமை பொறியாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகள் குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பெங்களூரில் 143 சேவை மையங்கள் உள்ளன. இந்த சேவை மையங்களில் வரும் புகார்களுக்கு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில வார்டுகளில் சரியாக குடிநீர் வினியோகிப்பதில்லை என, புகார்கள் வந்துள்ளன. இனி புகார்கள் வராமல் நடந்து கொள்ளுங்கள். சாக்கடை கழிவுநீர், வெளியில் பாயாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் வாரம் முதல், சேவை மையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு துவங்கப்படும். அதிகமான புகார்கள் வந்த பகுதிகளில் முதலில் ஆய்வு செய்யப்படும்.
மழை பெய்வதால், குடிநீர் வினியோகிப்பதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மக்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று, புகார்களை கேட்டறிய வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.