பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்
பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்
பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து நிதீஷ் குமார் கட்சி தீர்மானம்
ADDED : ஜூன் 30, 2024 12:05 AM

புதுடில்லி: பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பீஹாரில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதி களை கைப்பற்றியது.
மத்தியில் ஆட்சி அமைக்க, பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், முதல்வர் நிதீஷ் குமாரின் ஆதரவு, அக்கட்சிக்கு தவிர்க்க முடியாதது. இதன்படி, பிரதமர் மோடியின் அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற பழைய கோரிக்கையை, அக்கட்சி மீண்டும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ் குமார் தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
இதில், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்; நீட் முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், எதிர் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, வலுவான சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ஜாவை, கட்சியின் செயல் தலைவராக நியமித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், ''பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதல்ல. மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை விரைவுபடுத்துவதற்கும், மாநிலத்தின் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதற்கும் இது மிகவும் முக்கியம்,'' என்றார்.