ADDED : ஆக 05, 2024 01:38 AM

உடுப்பி: மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய கணவர், நடனமாடி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
கர்நாடகாவின் ஷிவமொகா மாவட்டம், சொரபாவை சேர்ந்தவர் லட்சுமண், 42. இவரது மனைவி அனிதா, 38. தற்போது உடுப்பி, குந்தாபுராவின் மஸ்ரூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
கடந்த நான்கு மாதங்களாக, இங்குள்ள காசி மடத்தின் தோட்டத்தை பராமரிக்கும் பணியை செய்கின்றனர்.
மது பழக்கத்துக்கு அடிமையான லட்சுமண், தினமும் குடித்து வந்து மனைவியை துன்புறுத்துவார். நேற்று முன்தினம் நள்ளிரவு குடி போதையில் வீட்டுக்கு வந்தார்.
வழக்கம் போல மனைவி அனிதாவிடம் தகராறு செய்தார். கத்தியால் அவரது கழுத்தை வெட்டினார். வலியால் அலறிய மனைவியை, சமையல் அறையில் அடைத்து விட்டு, கதவை வெளிப்புறமாக பூட்டினார்.
அதன்பின் கையில் கத்தியுடன், மனநலம் பாதித்தவர் போன்று ஆவேசமாக நடனம் ஆடினார்.
அனிதாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரிந்தது.
அவரை மீட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்; போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இவ்வளவு நடந்தும், எதையும் கவனிக்காமல் லட்சுமண் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தார்.
தகவலறிந்து அங்கு வந்த கன்ட்லுார் போலீசார், லட்சுணை கைது செய்து அழைத்து சென்றனர். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதா என விசாரணை நடக்கிறது.