கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு பல நிலைகளில் மெத்தனமே காரணம்
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு பல நிலைகளில் மெத்தனமே காரணம்
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு பல நிலைகளில் மெத்தனமே காரணம்
ADDED : ஜூலை 17, 2024 01:13 AM
புதுடில்லி, மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்துக்கு, பல நிலைகளில் உள்ள மெத்தனமே முக்கிய காரணம் என, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில், கடந்த மாதம் 17ம் தேதி, நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது, பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், சரக்கு ரயில் இன்ஜின் டிரைவர் உட்பட, 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து, சி.ஆர்.எஸ்., எனப்படும் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை வெளியாகிஉள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தீவிர ரயில்வே பணி தவறுகளாக இந்த விபத்து பார்க்கப்படுகிறது. பல நிலைகளில் ஏற்பட்ட குழப்பங்கள், மெத்தனப் போக்கே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகும். இதுபோன்ற விபத்து ஏற்படும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
இந்த குறிப்பிட்ட மார்க்கத்தில், தானியங்கி சிக்னல் முறையில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தன. இதுபோன்ற நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று, ரயில் டிரைவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் உட்பட அதிகாரிகளுக்கு முறையாக விளக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட சிக்னல் வேலை செய்யாவிட்டால், எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்று டிரைவர்களுக்கு, ஸ்டேஷன் மாஸ்டர்கள் தெரிவிக்க வேண்டும். இதற்கான, டி.ஏ., - 912 என்ற படிவம், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வழங்கப்பட வேண்டும்.
இந்த குறிப்பிட்ட மார்க்கத்தில், மூன்று சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை. அந்த நேரத்தில், இந்த பாதையில், ஆறு ரயில்கள் சென்றுள்ளன.
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர், விதிகளின்படி, 15 கி.மீ., வேகத்தில் இயக்கியுள்ளார். மேலும், குறிப்பிட்ட ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் ரயிலை நிறுத்தியுள்ளார்.
ஆனால், பின்னால் வந்த சரக்கு ரயில் இந்த விதிகளை பின்பற்றவில்லை. மேலும், அந்த சரக்கு ரயிலுக்கான படிவத்தில், எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடப்படவில்லை. இதனால், நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில், சரக்கு ரயில் வேகமாக மோதியுள்ளது.
ரயில் பாதைகளில் நடக்கும் விபத்துகளில், இதுபோன்ற சிக்னல் கோளாறு இருக்கும்போது, எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, டிரைவர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் போன்றவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாததே முக்கிய காரணமாக உள்ளது.
இது தொடர்பாக உடனடியாக முறையான பயிற்சிகளை அளிக்க வேண்டும். மேலும், 'கவச்' எனப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு முறையை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.