Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஜம்முவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் வீரமரணம்

ஜம்முவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் வீரமரணம்

ஜம்முவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் வீரமரணம்

ஜம்முவில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு ராணுவ அதிகாரி உட்பட 4 பேர் வீரமரணம்

ADDED : ஜூலை 17, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
ஜம்மு, ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி உட்பட நான்கு பேர், நேற்று வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு - காஷ்மீரில் உள்ள தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தேசா வனப் பகுதியை ஒட்டிய தாரி கோடே எனும் இடத்தில் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள் படையினரும், ஜம்மு - காஷ்மீர் போலீசாரின் சிறப்பு அதிரடி படையும் நேற்று முன்தினம் இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கூடுதல் படைகள்

அப்போது, அங்கிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விடாமல் துரத்திய ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சண்டையின் இறுதியில், ராணுவ அதிகாரி உட்பட ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் ராணுவ அதிகாரியான கேப்டன் பிரிஜேஷ் தாபா, வீரர்கள் டி ராஜேஷ், பிஜேந்திரா மற்றும் அஜய் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை வீரமரணம் அடைந்தனர். படுகாயமடைந்த மற்றொரு வீரருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, அடர்ந்த வனப்பகுதியில் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஹெலிகாப்டர்கள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் 9ம் தேதி பயங்கரவாதிகளின் தாக்குதலால், பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஒன்பது பயணியர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்களைத் தேடும் பணியில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதிகரிக்கும் தாக்குதல்

இதற்கு பதிலடி கொடுத்து வரும் பயங்கரவாதிகள், கடந்த வாரம் கதுவா மாவட்டத்தில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் பலியாகினர்.

ராணுவ வீரர்களின் தீவிர முயற்சியால், பல மாதங்களாக அமைதி நிலவிய ஜம்மு - காஷ்மீரில், கடந்த ஒரு மாதமாக பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது.

பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் மட்டும் தலைதுாக்கிய பயங்கரவாத செயல்கள் பிற மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளன.

ஜம்முவில் கடந்த 2021 முதல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 52 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட, 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான உயிரிழப்பு நடந்த ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் மட்டும், 54 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், 'கடமையின் போது உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடன் முழு தேசமும் உறுதியாக நிற்கிறது.

பழிவாங்குவோம்

'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பயங்கரவாதத்தை வேரோடு அகற்றவும், ஜம்மு - காஷ்மீரில் அமைதி மற்றும் சட்டம் - ஒழுங்கை மீட்கவும் வீரர்கள் உறுதியுடன் போராடி வருகின்றனர்' என, தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தன் சமூக வலைதள பக்கத்தில், 'நம் வீரர்களின் மரணத்துக்கு பழி வாங்குவோம். அதேபோல் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் திட்டங்களை முறியடிப்போம்.

'பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு, அவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் வழங்க வேண்டும். இதன் வாயிலாக நிச்சயம் அவர்களை ஒழிக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.

ராகுல் கண்டனம்

காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் கூறியதாவது: காஷ்மீரில் மற்றொரு பயங்கரவாத தாக்குதலில் நம் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற துயர சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடப்பது, மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.தொடர்ந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது காஷ்மீரில் நிலவும் மோசமான சூழ்நிலையை எடுத்து காட்டுகிறது. பா.ஜ.,வின் தவறான கொள்கைகளால் நம் ராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்றுக் கொள்வதுடன், நாட்டிற்கும், வீரர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேசபக்தி உள்ள ஒவ்வொரு குடிமகனும் எதிர்பார்க்கின்றனர். இந்த சோகமான நேரத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக நிற்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us