பழங்களின் ராஜாவுக்கு லால்பாக்கில் அமோக வரவேற்பு
பழங்களின் ராஜாவுக்கு லால்பாக்கில் அமோக வரவேற்பு
பழங்களின் ராஜாவுக்கு லால்பாக்கில் அமோக வரவேற்பு
ADDED : ஜூன் 02, 2024 06:05 AM

பெங்களூரு: பெங்களூரு லால்பாக்கில் நடந்து வரும், மாம்பழ மற்றும் பலாப்பழ கண்காட்சிக்கு, மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து உள்ளது. வார இறுதி நாளான நேற்று கூட்டம் அலை மோதியது.
கர்நாடக தோட்ட கலை துறை சார்பில், பெங்களூரு லால்பாக்கில் ஆண்டுதோறும் மாம்பழ மற்றும் பலாப்பழ கண்காட்சி நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாம்பழ மற்றும் பலாப்பழ கண்காட்சி, கடந்த மாதம் 24ம் துவங்கியது. வரும் 10ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. அல்போன்சா, பாதாமி, சிந்துாரா, ஹேமா, மல்லிகா உட்பட, பல ரக மாம்பழங்கள் இடம் பெற்று உள்ளன.
வார இறுதி விடுமுறையான நாளான நேற்று, மாம்பழ மற்றும் பலாப்பழ கண்காட்சி மக்களிடம், நல்ல வரவேற்பு இருந்தது.
மாம்பழ கடைகளில் கூடிய மக்கள், தங்களுக்கு பிடித்த மாம்பழங்களை வாங்கினர். மாம்பழ பிரியர்கள், அனைத்து ரக மாம்பழங்களையும் வாங்கி ருசித்து சாப்பிட்டனர். கிலோ கணக்கில் வீடுகளுக்கு வாங்கி சென்றனர்.
இதுபோல பலா பழங்கள், தேன், குல்கந்த் என, கண்காட்சியில் இடம் பெற்று இருந்த, இயற்கையான பொருட்களை வாங்கி சென்றனர்.
மாம்பழ கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அடேங்கப்பா... 15 கிலோ மாம்பழம்!
எனக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். இங்கு நடக்கும் மாம்பழ கண்காட்சியில் அல்போன்சா, பாதாமி உட்பட பல ரக மாம்பழங்கள் உள்ளன. நான் 15 கிலோ மாம்பழம் வாங்கி உள்ளேன். மாம்பழ கண்காட்சி புதிய அனுபவமாக இருந்தது.
ஜெஷா அலெக்ஸ், ஐ.டி., ஊழியர்
தரமான பொருட்கள்
மாம்பழங்களை வாங்கி ருசித்து பார்த்தேன். இங்கு இயற்கையான மலை தேனும் கிடைக்கிறது. ஆப்ரிக்காவில் இருந்தும் தேன் வந்து உள்ளது. குல்கந்த்தும் கிடைக்கிறது. அனைத்து பொருட்களும் தரமாக உள்ளது.
பரத்,
எம்.எஸ்சி., மாணவர்
முதன் முதலாக
பெங்களூரை சுற்றிபார்க்க முதல்முறையாக வந்தேன். மாம்பழ கண்காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய மாம்பழங்கள் இங்கு உள்ளன. மாம்பழங்களை வாங்கி ருசித்து சாப்பிட்டேன். சுவை அருமை.
கனிஷ்கா,
எம்.பி.பி.எஸ்., மாணவி, சேலம்.
குடும்பத்துடன் மழையில் ரசிப்பு
கே.ஆர்.புரத்தில் உள்ள சித்தி வீட்டிற்கு, விடுமுறைக்காக வந்து இருந்தேன். லால்பாக்கில் மாம்பழ கண்காட்சி நடப்பது தெரிந்ததால், குடும்பத்துடன் இங்கு வந்தோம். மழையில் நனைந்தபடியே, பல ரக மாம்பழங்களை பார்த்து ரசித்தேன்.
பிரியா, காஞ்சிபுரம்.