Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் குப்பையில்... அகங்காரத்தின் வெளிப்பாடு என கொதிப்பு

முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் குப்பையில்... அகங்காரத்தின் வெளிப்பாடு என கொதிப்பு

முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் குப்பையில்... அகங்காரத்தின் வெளிப்பாடு என கொதிப்பு

முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் குப்பையில்... அகங்காரத்தின் வெளிப்பாடு என கொதிப்பு

ADDED : ஜூலை 14, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
சாம்ராஜ்நகர், : முதல்வர் சித்தராமையாவிடம் விவசாயிகள், பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள், குப்பையில் வீசப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். இது அகங்காரத்தின் வெளிப்பாடு என, அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

முதல்வர் சித்தராமையா, ஜூலை 10ல் சாம்ராஜ்நகருக்கு சென்றிருந்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயிகள், பொதுமக்கள், விவசாய சங்கத்தினர், கொரோனா நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் குடும்பத்தினர், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வரிடம் மனு கொடுத்தனர்.

விவசாயிகள் கொதிப்பு


முதல்வரிடம் கொடுத்த கோரிக்கை மனுக்கள், சாம்ராஜ்நகரின் அம்பேத்கர் விளையாட்டு அரங்கில் குப்பையில் போடப்பட்டிருந்தன. நேற்று காலை இதை பார்த்த பொதுமக்கள், விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.

அன்றைய தினம் மணிக்கணக்கில் காத்திருந்து, முதல்வரிடம் மனுக் கொடுத்தனர். அவற்றை குப்பையில் போட்டதை, எதிர்க்கட்சிகள் உட்பட, பலரும் கண்டித்துள்ளனர்.

'இது அகங்காரத்தின் வெளிப்பாடு. இந்த செயலுக்கு முதல்வர் சித்தராமையா மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், முதல்வர் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வரும் போது, கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்துவோம். மாவட்டத்தில் அவர் கால் வைக்க விடமாட்டோம்' என, விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:

மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணாமல், அவர்களின் கோரிக்கை மனுக்களை குப்பையில் வீசும் காங்கிரஸ் அரசு, 'ஜனதா தரிசனம்' என்ற பெயரில் நாடகம் ஆடுவது ஏன்? இதை பா.ஜ., கண்டிக்கிறது.

காத்திருப்பு


முதல்வரிடம் சென்றால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் வெகு தொலைவில் இருந்து வருகின்றனர். மணிக்கணக்கில் காத்திருந்து, முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனர்.

ஆனால் அவர்களின் கஷ்டங்களை தீர்த்து, கண்ணீரை துடைப்பதற்கு முன்பே, கோரிக்கை மனுக்களை குப்பையில் போட்டது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கும் அளவுக்கு, முதல்வர் சித்தராமையாவுக்கு, அதிகார போதை தலைக்கேறி உள்ளது. தங்கள் கஷ்டங்களை கூறி, மக்கள் கொடுத்த மனுக்களை குப்பையில் போட்டுள்ளனர். இத்தகைய அதிகார மதம், சித்தராமையாவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

ஆர். அசோக்,

எதிர்க்கட்சித் தலைவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us