நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மேலும் இரண்டு பேர் கைது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மேலும் இரண்டு பேர் கைது
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மேலும் இரண்டு பேர் கைது
ADDED : ஜூலை 17, 2024 01:14 AM
புதுடில்லி,நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மேலும் இரண்டு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. தேர்வுக்கு முன் வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுவரை பீஹார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் இந்த வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாகில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சஞ்சீவ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உறவினர் ராக்கி ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாகில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டியில் இருந்து, நீட் வினாத்தாளை திருடியதாக, பங்கஜ் குமார் என்கிற ஆதித்யா என்பவரை சி.பி.ஐ., அதிகாரிகள் பீஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று கைது செய்தனர். பீஹாரின் போகாரோ பகுதியைச் சேர்ந்த இவர், புகழ்பெற்ற ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப மையத்தில் 2017ம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார்.
இதேபோல், பங்கஜ் குமாருக்கு உதவிய ராஜு சிங் என்பவரை ஜார்க்கண்டின் ஹசாரிபாகில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்கள் இருவரும், நீட் வினாத்தாள் கசிய முக்கிய காரணமானவர்கள் என கருதப்படும் நிலையில், தொடர்ந்து அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.