Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் பதிலளிக்க தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் பதிலளிக்க தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் பதிலளிக்க தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் பதிலளிக்க தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு

UPDATED : ஜூலை 17, 2024 04:40 AMADDED : ஜூலை 17, 2024 01:15 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி, சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதுடன், இதில் ஈடுபட்டுஉள்ளோருக்கு வழங்கிய லைசென்சை ரத்துசெய்ய உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, தமிழகம் உட்பட, நான்கு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது.

சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிட்டதாவது:

இந்த வழக்கு, 2018ல் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுக்கு இழப்பு

இதில், பஞ்சாப் அரசு மட்டும் பதில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழகம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் இதுவரை பதில் தாக்கல் செய்யவில்லை.

சுற்றுச்சூழலுடன் பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, அமர்வு கூறியுள்ளதாவது:

இந்த விவகாரம் தொடர்பாக, இந்த நான்கு மாநிலங்களும், ஆறு வாரங்களுக்குள் தங்களுடைய பதிலை தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை மிகவும் குறைவு என்றாலும், தங்களுடைய பொறுப்பை இந்த மாநிலங்கள் உணர்வதற்காக இது விதிக்கப்படும்.

இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நிலவரம் தொடர்பாக, தனியாக துணைக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட அமர்வு, அதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:

நாட்டின் பல மாநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், சட்டவிரோத மணல் கொள்ளை மிகவும் தீவிரமாக உள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசு நிர்வாகத்தின் உரிய அனுமதி இன்றி, லைசென்ஸ் அளவைத் தாண்டி இவ்வாறு நடக்கும் கொள்ளையை அரசு நிர்வாகங்கள் கண்டுகொள்ளாமல் உள்ளன.

சி.பி.ஐ., விசாரணை


மாநில அரசுகளின் உரிய விதிமுறைகள் இல்லாததால், மணல் கொள்ளை மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்புடன், குடிமக்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் இல்லாமல், பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல், இதுபோன்ற மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது.

இதுவரை நடந்துள்ள மணல் கொள்ளைகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மணல் கொள்ளையில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த சட்டவிரோத மணல் கொள்ளையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும், மாபியாக்களின் கொட்டமும் ஏற்படுகிறது. இதையெல்லாம்விட அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

குறிப்பிட்ட அளவுக்கு லைசென்ஸ் பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டோருக்கு வழங்கப்பட்ட அந்த லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us