விமான கட்டணத்தை குறைப்போம் மத்திய அமைச்சர் நாயுடு தகவல்
விமான கட்டணத்தை குறைப்போம் மத்திய அமைச்சர் நாயுடு தகவல்
விமான கட்டணத்தை குறைப்போம் மத்திய அமைச்சர் நாயுடு தகவல்
ADDED : ஜூன் 14, 2024 12:15 AM

புதுடில்லி, ''சாதாரண மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு டிக்கெட் விலையை குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும்,'' என, புதிதாக பொறுப்பேற்றுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
நம் நாட்டில் இயக்கப்படும் 60 சதவீத பயணியர் விமானங்களை, 'இண்டிகோ' நிறுவனமும், 30 சதவீத விமானங்களை, 'டாடா' குழுமத்தின், 'ஏர் - இந்தியா' நிறுவனமும் இயக்குகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது. 15.30 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இது 2030ல் 30 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், விமான டிக்கெட் கட்டணமும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது:
விமானப் போக்குவரத்து துறையில் நாம் முதன்மையாக திகழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கேபினட்டின் மிக இளம் அமைச்சரான என்னிடம் மிகப்பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை சவாலாக ஏற்று நிறைவேற்றுவேன்.
விமான டிக்கெட் கட்டணம் திடீரென உயர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களை அரசு உருவாக்க வேண்டும் என, பார்லிமென்ட் கமிட்டி கடந்த பிப்ரவரியில் பரிந்துரைத்துள்ளது.
ஒரு சில குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான கட்டண உச்ச வரம்பை ஆய்வு செய்யலாம். சாதாரண மக்களும் விமானப் பயணம் செய்யும் வகையில் கட்டணங்களை குறைப்பதே எங்கள் நோக்கம்.
ரயில் கட்டணத்துக்கு நிகராக, விமானப் போக்குவரத்து கட்டணம் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். அதில் அதிக கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.