'பாடல்களுக்கான பதிப்புரிமையை இளையராஜா தக்க வைக்கவில்லை'
'பாடல்களுக்கான பதிப்புரிமையை இளையராஜா தக்க வைக்கவில்லை'
'பாடல்களுக்கான பதிப்புரிமையை இளையராஜா தக்க வைக்கவில்லை'
ADDED : ஜூன் 14, 2024 12:40 AM

சென்னை : 'தயாரிப்பாளர்கள் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாமல், பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கோர முடியாது. சினிமா பாடல்களுக்கான பதிப்புரிமையை, இளையராஜா தக்க வைக்கவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'எக்கோ' நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமை தனக்கு உள்ளது என்பதால், 4,500க்கும் மேற்பட்ட தன் பாடல்களை பயன்படுத்த, எக்கோ ரிகார்டிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரிகார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக்கோரி, எக்கோ ரிகார்டிங் உள்ளிட்ட நிறுவனங்கள், மனுக்கள் தாக்கல் செய்தன.
தயாரிப்பாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் அடிப்படையில், பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், படங்களின் பதிப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும் மனுக்களில் கூறப்பட்டன.
இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன. எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடியதாவது:
இசையமைப்புக்காக இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது. அதனால், தயாரிப்பாளருக்கு அதன் உரிமை சென்று விடும். தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு, 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் பெற்றுள்ளது. இளையராஜா உடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. இருந்தும், அவருக்கு ராயல்டி வழங்கப்பட்டது. பின், அது நிறுத்தப்பட்டது.
பாடல் வரிகளை மாற்றினால், இசையை திரித்தால், அதுகுறித்து கேள்வி கேட்கலாம். சமீபத்தில், தன் பாடல் திரிக்கப்பட்டதாக, மஞ்சுமேல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு, இளையராஜா ,'நோட்டீஸ்' அனுப்பினார். இசையமைப்பாளர் ரகுமான், பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவது இல்லை.
ஆனால், பட தயாரிப்பாளர்களிடம் இளையராஜா தன் உரிமையை வழங்கி விட்டார். உரிமையை வைத்திருக்க விரும்பினால், ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஒப்பந்தம் மேற்கொள்ளாத நிலையில், இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது. இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து, இளையராஜா தரப்பில் வாதாடுவதற்காக, விசாரணையை, வரும் 19 க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.