தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? ஆம் ஆத்மி கட்சி போராட்டம்
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? ஆம் ஆத்மி கட்சி போராட்டம்
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? ஆம் ஆத்மி கட்சி போராட்டம்
ADDED : மார் 12, 2025 08:13 PM

புதுடில்லி:பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதி, ஹோலி பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர் ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி, ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
டில்லி சட்டசபைத் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவில்லை என ஆம் ஆத்மி கடந்த வாரம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமைச்சரவை ஒப்புதல் பெற்று, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி முதல் தவணைத் தொகை பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்து இருந்தார். ஆனால், அது இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு அனைத்து குடும்பங்களுக்கும் இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டி, நேற்று போராட்டம் நடத்தியது.
அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ரிதுராஜ் ஜா தலைமையில், ஐ.டி.ஓ., அருகே நடந்த போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது, ஜா பேசியதாவது:
சட்டசபைத் தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதியையும் பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை. ஏற்கனவே, மார்ச் 8ம் தேதி வழங்கப்படும் என பிரதமரே உறுதியளித்த பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தை இன்னும் நிறைவேற்றவில்லை. அமைச்சரவை ஒப்புதல் மட்டுமே பெற்று விட்டு, கிடப்பில் போட்டு விட்டனர். அதேபோல, ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர் திட்டம் குறித்தும் பா.ஜ., அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் பா.ஜ.,வின் வழக்கமான பொய் என்பது நிரூபணம் ஆகி விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சீமா, “மார்ச் 8ம் தேதி வங்கிக் கணக்கில் 2,500 ரூபாய் வரவு வைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால், இன்னும் வரவில்லை. அதேபோல, ஹோலி பண்டிகையும் வந்து விட்டது. ஆனால், இலவச காஸ் சிலிண்டர்தான் இன்னும் வரவில்லை,”என்றார்.