ஒமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து கிடைக்குமா?
ஒமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து கிடைக்குமா?
ஒமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து கிடைக்குமா?
ADDED : ஜூலை 16, 2024 12:56 AM

புதுடில்லி: மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கோரி ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி, அவரது மனைவி பாயலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய கட்சியான தேசிய மாநாடு கட்சியின் தலைவராக இருப்பவர் ஒமர் அப்துல்லா. முன்னாள் முதல்வரான இவருக்கு, பாயல் என்பவருடன் 1994ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக கணவர் ஒமரை பிரிந்து பாயல் வசித்து வருகிறார். மனைவி, தன்னை கொடுமைப்படுத்துவதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கக் கோரி, டில்லி குடும்பநல நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா வழக்கு தொடர்ந்தார். இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஒமர் அப்துல்லாவை, அவரது மனைவி கொடுமைப்படுத்தினார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒமர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வதால், அவர்களது திருமணம் முறிந்துவிட்டது. இனி அவர்கள் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை. எனவே, விவாகரத்து வழங்க வேண்டும்,” என, வாதாடினார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, பாயலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.