நெளி கோதுமை மாவு சாப்பிட்ட 200 பேர் 'அட்மிட்'
நெளி கோதுமை மாவு சாப்பிட்ட 200 பேர் 'அட்மிட்'
நெளி கோதுமை மாவு சாப்பிட்ட 200 பேர் 'அட்மிட்'
ADDED : செப் 24, 2025 12:16 AM

புதுடில்லி:வடமேற்கு டில்லியில் நவராத்திரி விரத காலத்தில், நெளி கோதுமை மாவு சாப்பிட்ட 200 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
நவராத்திரி விழா நேற்று முன் தினம் துவங்கியது. வட மாநிலங்களில் ஏராளாமானோர் ஒன்பது நாட்களும் விரதம் இருக்கின்றனர். தினமும் இரவு பூஜை முடிந்தவுடன், விரதத்தை நிறைவு செய்ய நெளி கோதுமை மாவில் செய்த உணவு வகைகளை சாப்பிடுவர்.
வடமேற்கு டில்லி ஜஹாங்கிர்புரி, மகேந்திரா பார்க், சமய்பூர், பால்ஸ்வா டெய்ரி, லால் பாக் மற்றும் ஸ்வரூப் நகர் பகுதிகளில் நேற்று முன் தினம் விரதம் முடித்து நெளி கோதுமை மாவு உணவு சாப்பிட்ட ஏராளமானோருக்கு நள்ளிரவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பி.ஜெ.ஆர்.எம்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து, நேற்று காலை தகவல் அறிந்த ஜஹாங்கிர்புரி போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். நள்ளிரவு முதல் அவசர சிகிச்சைப் பிரிவில் 200 பேர் வரை அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளில் நெளி கோதுமை மாவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உணவுத் துறை மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் ஜஹாங்கிர்புரியில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தினர். விசாரணை முடுக்கி விடப் பட்டுள்ளது.
கலப்படம் ஆம் ஆத்மி டில்லி மாநில தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது:
கலப்பட மாவை சாப்பிட்டு மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், டில்லி பா.ஜ., அரசு தாண்டியா கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல, புராரி மருத்துவமனையிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நவராத்திரி விரதம் இருப்போரின் உணவில் கூட, கலப் படம் நடக்கிறது. ஆனால், நான்கு இயந்திர பா.ஜ., அரசு தண்டியா ஆடிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அங்குஷ் நரங் கூறுகையில், “உணவுப் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாட்டுக்கு பா.ஜ., அரசு பொறுப்பேற்க வேண்டும். நவராத்திரி போன்ற புனித பண்டிகையின்போது, பா.ஜ.,வின் நான்கு இயந்திர அரசு பக்தர்களின் தட்டுகளில் விஷத்தை நிரப்பியுள்ளது,” என்றார்.