ஹனுமனை போல கடினமாக உழைக்கும் அதிகாரிகள் முதல்வர் ரேகா குப்தா புகழாரம்
ஹனுமனை போல கடினமாக உழைக்கும் அதிகாரிகள் முதல்வர் ரேகா குப்தா புகழாரம்
ஹனுமனை போல கடினமாக உழைக்கும் அதிகாரிகள் முதல்வர் ரேகா குப்தா புகழாரம்
ADDED : செப் 24, 2025 12:17 AM

புதுடில்லி:“டில்லி அரசு அதிகாரிகள் ஹனுமன் போன்றவர்கள். பா.ஜ., அரசு அமைந்ததில் இருந்து, சிறந்த சூழ்நிலையில் கடினமாக உழைக்கின்றனர். டில்லி மாநகரின் மேம்பாட்டுக்காக சிறந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
டில்லி மஹாராணா பிரதாப் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் பராத் நகருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இன்டர்ஸ்டேட் ஏ.சி., பஸ்களை, முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்துப் பேசியதாவது:
ஆலோசனை டில்லி அரசின் அதிகாரிகள் ஹனுமனைப் போன்றவர்கள். டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததில் இருந்து வேலை செய்வதற்கான சிறந்த சூழ்நிலையில் கடினமாக உழைக்கின்றனர்.
டில்லி மாநகரின் மேம்பாட்டுக்காக சிறந்த ஆலோசனைகளை வழங்குகின்றனர். தற்போது, உத்தரப் பிரதேசத்துக்கு பஸ்கள் துவக்கப்பட்டு உள்ளன.
அதேபோல, மற்ற மாநிலங்களுக்கும் டில்லியில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உத்தராகண்ட் மாநில அரசு பஸ்கள் டில்லியில் இயக்கப்படுகின்றன. அதேபோல, உத்தரப் பிரதேசத்திலிருந்து டில்லிக்கு பஸ்கள் வருகின்றன. ஆனால், டில்லியிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏன் பஸ்கள் இயக்கப்படுவதில்லை என யோசித்துக் கொண்டிருந்தேன்.
வருவாய் டில்லி அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்ற மாநிலங்களுக்கு இயக்கிக் கொண்டிருந்த பஸ்களை, முந்தைய ஆம் ஆத்மி அரசு நிறுத்தி விட்டதை, நான் முதல்வர் ஆனவுடன் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் திட்டங்களை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றவில்லை.
அனைத்து வழித்தடங்களிலும் போதுமான அளவுக்கு பஸ்கள் இயக்க ஆய்வு செய்து வருகிறோம். முந்தைய ஆம் ஆத்மி அரசில், மெஹ்ரூலியில் ஒரு பஸ் பழுதடைந்தால், அதை சீரமைக்க நரேலாவில் இருந்து பணியாளர்கள் வருவர். இதனால் தேவையற்ற தாமதம் ஏற்பட்டது.
தற்போது, அருகிலுள்ள டிப்போவிலிருந்து பழுது நீக்கும் வாகனம் வரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லி அரசுப் போக்குவரத்துக் கழகம் இழந்த தன் பெருமையை மீண்டும் பெறும் வகையில் அதிகாரிகள் கடினமாக உழைத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
டில்லி - பராத் இடையே 60 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்படும் பஸ்சில், குறைந்தபட்ச கட்டணம் 32 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டில்லி மஹாராணா பிரதாப் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் - பராத் நகருக்கு 125 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் புறப்படும் பஸ் கஜூரி காஸ், பஜன்புரா, லோனி பஸ் நிலையம், உத்தரப் பிரதேச எல்லை, லோனி, மண்டோலா, கேக்ரா, கதா, பக்பத், கோரிபூர், சரூர்பூர், தியோதி, பராத் மற்றும் வைஸ் ஆகிய நகரங்களுக்கு செல்கிறது.
துாய்மை இயக்கம் -பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 'சேவா பக்வாடா' திட்டத்தின் கீழ் டில்லி மாநகர் முழுதும் நேற்று துாய்மை இயக்கம் நடத்தப்பட்டது. அமைச்சர்கள், மேயர், கவுன்சிலர்கள், எம்.பி.,க்கள், எம். எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
ஷாலிமார் பாக்க் ரிங் ரோடில் நடந்த இயக்கத்தில் பங்கேற்ற முதல்வர் ரேகா குப்தா, மேம்பால துாணில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களை கிழித்தார். மேலும், பாலத்தின் அடியில் குப்பையை அப்புறப்படுத்தினார்.
அப்போது, ரேகா குப்தா கூறியதாவது:
டில்லி மாநகரை அழகான நகரமாக பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சுவரில் விளம்பரம் செய்வது, போஸ்டர் ஓட்டுவது ஆகியவை குற்றச் செயல்.
பொதுச் சொத்துக்களை சிதைப்பதை அரசு பொறுத்துக்கொள்ளாது. அரசியல்வாதிகள் பொதுச்சுவரில் போஸ்டர் ஒட்டுவதை நிறுத்த வேண்டும்.
சுத்தம் என்பது வெறும் இந்த ஒரு மணி நேர இயக்கத்தின் வாயிலாக மட்டும் நடக்கும் விஷயம் அல்ல.
குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் தினமும் ஒரு கடமையாக பொது இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஹாத்மா காந்தி சாலை ரிங் ரோட்டில் பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, ஐ.டி.ஓ., மேம்பாலத்தின் கீழ் பகுதியில் டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனர்.