Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கன்னடர்களுக்கு 75 சதவீதம் பணி என்ற முடிவில் பல்டி!: கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது கர்நாடக காங்கிரஸ் அரசு

கன்னடர்களுக்கு 75 சதவீதம் பணி என்ற முடிவில் பல்டி!: கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது கர்நாடக காங்கிரஸ் அரசு

கன்னடர்களுக்கு 75 சதவீதம் பணி என்ற முடிவில் பல்டி!: கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது கர்நாடக காங்கிரஸ் அரசு

கன்னடர்களுக்கு 75 சதவீதம் பணி என்ற முடிவில் பல்டி!: கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது கர்நாடக காங்கிரஸ் அரசு

ADDED : ஜூலை 18, 2024 12:26 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும்; மற்ற பணிகளில் 75 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதை சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுதும் எழுந்த கடும் எதிர்ப்பால், மசோதா தாக்கல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக காங்., அரசு நேற்று இரவு அறிவித்தது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 'கர்நாடகாவில் இயங்கும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்குவதற்கு, தனிச்சட்டம் கொண்டு வரப்படும்' என கடந்தாண்டு அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில், முதல்வர் சித்தராமையா தலைமையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பான சட்ட மசோதாவை, சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

முதல்வர் அறிக்கை


இதுகுறித்து, முதல்வர் சித்தராமையா நேற்று, 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தின் தனியார் தொழிற்சாலைகள் உட்பட நிறுவனங்களில் கன்னடர்களுக்கு நிர்வாகப் பிரிவு வேலைவாய்ப்புகளில், 50 சதவீதமும்; நிர்வாகப் பிரிவு அல்லாத வேலைவாய்ப்புகளில் 75 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்வதற்கு, கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

எங்களுடையது கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலன் காப்பது எங்களின் முக்கிய பொறுப்பு.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசின் முடிவுக்கு, பிரபல தனியார் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரபல பயோகான் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'ஒரு தொழில்நுட்ப மையமாக எங்களுக்கு திறமையான நபர்கள் தேவை.

'உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கத்தால், தொழில்நுட்பத்தில் நம் முன்னணி நிலை பாதிக்கக்கூடாது. இந்த கொள்கையால், மிகவும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்பு உண்டு' என தெரிவித்திருந்தார்.

'நாஸ்காம்' அதிருப்தி


பிரபல, 'நாஸ்காம்' நிறுவனமும், கர்நாடக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதன், 'எக்ஸ்' பதிவில், 'கர்நாடக மாநிலம், ஒட்டுமொத்த தொழில்நுட்ப உள்நாட்டு உற்பத்தியில், 25 சதவீதத்தை வழங்குகிறது. 11,000 தொழில்நுட்ப நிறுவனங்கள் இம்மாநிலத்தில் இயங்குகின்றன.

'சர்வதேச அளவில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசின் முடிவால், திறமையானவர்கள் பாதிக்கப்படலாம்' என தெரிவித்தது.

ஆந்திரா அழைப்பு

ஆந்திராவின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நர லோகேஷ், 'எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாஸ்காம் உறுப்பினர்களே, உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் புரிந்து கொள்கிறோம். விசாகப்பட்டினத்தில் உள்ள எங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள், செயற்கை நுண்ணறிவு அடங்கிய மையத்துக்கு, உங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய அல்லது இடமாற்றம் செய்ய வரவேற்கிறோம்.

நாங்கள் உங்களுக்கு சிறந்த வசதிகள், தடையில்லா மின்சாரம், உள்கட்டமைப்பு, ஐ.டி., நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான திறமையான ஊழியர்களை எந்த தடையுமின்றி வழங்குவோம். உங்களை வரவேற்க ஆந்திரா தயாராக உள்ளது. தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கர்நாடக அரசின் முடிவுக்கு நாடு முழுதும் தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, நேற்று இரவு மாநில அரசு விடுத்த செய்திக்குறிப்பில், 'தனியார் நிறுவனங்களில், கன்னடர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்வது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us