எல்லையில் மோதல்களை துாண்ட சதித்திட்டம்!: யூனுஸ் முயற்சி தோல்வி
எல்லையில் மோதல்களை துாண்ட சதித்திட்டம்!: யூனுஸ் முயற்சி தோல்வி
எல்லையில் மோதல்களை துாண்ட சதித்திட்டம்!: யூனுஸ் முயற்சி தோல்வி

புதுடில்லி: வங்கதேசத்தின் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும், மக்களை தனக்கு பின்னால் அணி திரட்டவும், இந்தியாவுடன் எல்லையில் மோதல்களை துாண்டிவிட அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சதித்திட்டம் தீட்டியதும், அதற்கு அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம்அடைந்ததை அடுத்து, பிரதமராக இருந்த அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
அதைத் தொடர்ந்து, சீன ஆதரவாளரான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், அங்கு இடைக்கால அரசு பதவியேற்றது.
அப்போது முதல், வங்க தேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முகமது யூனுஸ், வங்கக் கடலின் பாதுகாவலராக வங்கதேசம் இருப்பதாக குறிப்பிட்டார்.
சர்ச்சை
மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் தங்களது உதவியின்றி வங்கக் கடலை அணுக முடியாது என்றும் சர்ச்சைக்குஉரிய வகையில் பேசினார். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
முகமது யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு பதவியேற்றதில் இருந்து இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு சுமூகமாக இல்லை.
இதற்கிடையே, வங்க தேசத்தில் பொதுத் தேர்தலை நடத்த கோரி, அந்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இதை முகமது யூனுஸ் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், பொதுத் தேர்தலை நடத்தக் கோரி, தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
பல முனைகளில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, உஷாரான முகமது யூனுஸ், 2026 ஏப்ரலுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, குறிப்பிட்டார்.
இந்நிலையில், வங்க தேசத்தில் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப, அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சதித்திட்டம் தீட்டியதும், அதற்கு ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து, வங்கதேச ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை இந்தியா துவங்கிய நேரத்தில், வங்கதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலுர் ரஹ்மான், ராணுவ ஜெனரல் முகமது பைசூர் ரஹ்மான் ஆகியோருடன், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ரகசிய சந்திப்பை நடத்தினார்.
அப்போது, உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், ஆட்சி அதிகாரத்தில் நீடிக்கவும், பொதுத் தேர்தலை நடத்தாமலிருக்கவும், தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக அவர்களிடம் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் நெருக்கமாக இருக்கும் முகமது பைசூர் ரஹ்மான், இத்திட்டத்தை முன்னின்று செயல்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
அவரது அறிவுரைப்படி, இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினருக்கு, சில உத்தரவுகள் வழங்கப்பட்டன.
அதாவது, எல்லையில் இந்தியாவுக்கு தொந்தரவு தரும் வகையில், வேண்டுமென்றே சில பிரச்னைகளை உருவாக்குவது; பதற்றத்தை ஏற்படுத்துவது; மோதல் போக்கை பின்பற்றுவது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதன்படியே, சர்வதேச எல்லையில், வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். இதனால் இந்தியா - வங்கதேச எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்த தகவலை அறிந்த வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் முகமது அஷ்ரபுஸ்ஸாமான் சித்திக்கை தொடர்பு கொண்டு, எல்லையில் இந்தியா உடனான மோதல் போக்கை கைவிடும்படி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்தே வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் ஆக்ரோஷமான போக்கை கைவிட்டனர்.
ஆபத்தானது
முகமது யூனுசின் நோக்கம் என்னவென்றால், எல்லையில் சண்டையை துாண்டி விட்டு, இந்தியாவுக்கு எதிராக மக்களை திரட்டுவது.
தேச பக்தி என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக பேசினால், மக்கள் தன் பக்கம் வருவர் என்பதும் அவரது கணக்கு.
இதனால், முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பி குளிர் காயலாம் என்பதும் அவரது திட்டம்.
இத்திட்டத்துக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலுர் ரஹ்மான் உள்ளிட்டோர் வாயிலாக ராணுவத்திடம் அனுமதி பெற, முகமது யூனுஸ் காய் நகர்த்தினார்.
இந்த சதித்திட்டம் பற்றி கேட்டதும், ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே, தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மிசானுார் ரஹ்மான் ஷமிம், விமானப்படை தளபதி ஹசன் மஹ்மூத் கான், கடற்படை தளபதி முகமது நஸ்முல் ஹசன் உள்ளிட்டோருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதன்பின், தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலுர் ரஹ்மானுக்கும், ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் எச்சரிக்கை செய்தியை அனுப்பினார்.
இந்தத் திட்டம் ஒரு முட்டாள்தனமான திட்டம். அது ஒருபோதும் செயல்படாது.
இந்தியா உடனான எல்லையில் பதற்றங்களை உருவாக்குவதையும், அந்நாட்டை சண்டைக்கு துாண்டுவதையும் தான் கடுமையாக எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், எல்லையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நிலைமை மோசமாக இருக்கும் என்றும், இந்தியாவுடன் விளையாடுவது ஆபத்தானது என்றும், அந்நாட்டுடன் சண்டையிடும் திறன் வங்கதேச ராணுவத்திடம் இல்லை எனவும் வாக்கர் -உஸ் -ஜமான் கூறினார்.
எல்லையில் எந்தப் படைகளையும் நிறுத்தப் போவதில்லை என்றும், தன் உத்தரவை தவிர மற்றவர்களின் உத்தரவுகளை பின்பற்றக் கூடாது என்றும் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினருக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த முடியாது என ராணுவம் கைவிரித்த நிலையில், சதித்திட்டத்தை முகமது யூனுஸ் கைவிட்டார். இதுதவிர, வங்கதேச தேசியவாத கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அவருக்கு அழுத்தம் கொடுத்தன.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
நன்றி: ஸ்வராஜ்யா (ஜூன் 10, 2025)