2 ஆண்டாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட பாலம் 'டமால்'
2 ஆண்டாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட பாலம் 'டமால்'
2 ஆண்டாக புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட பாலம் 'டமால்'
ADDED : ஜூன் 18, 2025 11:58 PM
சில்சார்: அசாமில் இரண்டு ஆண்டுகளாக பழுது பார்க்கப்பட்ட பின், சமீபத்தில் திறக்கப்பட்ட பாலம் மீண்டும் இடிந்து விழுந்தது. அப்போது, பாலத்தில் சென்ற இரு லாரிகள் ஆற்றில் விழுந்து மூழ்கின.
வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேகாலயாவை இணைக்கும் வகையில், சில்சார் - கலைன் சாலையில் பழமையான பாலம் ஒன்று உள்ளது.
ஹராங் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த இரு ஆண்டுகளாக சீரமைக்கப்பட்ட பின் கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அந்த பாலத்தின் மீது பாரம் ஏற்றிக்கொண்டு இரு லாரிகள் சென்றன. அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்து, கீழே சென்ற ஹராங் ஆற்றில் மூழ்கின.
அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும் சம்பவம் பற்றி அறிந்த கச்சார் மாவட்ட துணை கலெக்டர் மிருதுள் யாதவ், பாலம் இடிந்தது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், ''பாலத்தில் அதிகபாரம் ஏற்றி செல்லக்கூடாது என வாகனங்களுக்கு கட்டுபாடு உள்ளது. இதை கண்காணிக்க நான்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.
பாலம் இடிந்ததால், மறுகரைக்கு செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அவதியடைந்தனர். தற்போது ஆற்றை கடக்க படகு வசதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த பாலத்தில், 120 டன் வரை லாரியில் பாரம் ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.