200 தடவரூ.3,000 செலுத்தி 'டோல்கேட்'டை 200 தடவை கடக்கலாம்: வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' ஆகஸ்ட் 15ல் அமல்
200 தடவரூ.3,000 செலுத்தி 'டோல்கேட்'டை 200 தடவை கடக்கலாம்: வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' ஆகஸ்ட் 15ல் அமல்
200 தடவரூ.3,000 செலுத்தி 'டோல்கேட்'டை 200 தடவை கடக்கலாம்: வருடாந்திர 'பாஸ்டேக் பாஸ்' ஆகஸ்ட் 15ல் அமல்
ADDED : ஜூன் 19, 2025 12:05 AM

புதுடில்லி: ஆண்டுக்கு, 3,000 ரூபாய் செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் புதிய, 'பாஸ்டேக்' நடைமுறை, ஆக., 15 முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
'டோல்கேட்' எனப்படும், சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்குரிய கட்டணங்களை செலுத்த, நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, 'பாஸ்டேக்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால், நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலும் குறைந்தது.
இதை மேலும் எளிதாக்க, 'பாஸ்டேக் பாஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தன் சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தடையற்ற பயணம்
வரும் ஆகஸ்ட் 15 முதல் பாஸ்டேக் திட்டத்தில், 3,000 ரூபாய்க்கு வருடாந்திர பாஸ் அறிமுக்கப்படுத்த உள்ளோம். இந்த பாஸ், செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும்; அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். இதில் எது அதிகமோ, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும்.
வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்காகவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற வாகனங்கள் இந்த பாஸை பயன்படுத்தலாம். இந்த புதிய நடைமுறை, நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்தை அனுமதிக்கும்.
இந்த வருடாந்திர பாஸை செயல்படுத்துதல், புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக, தனி இணைப்பு ஒன்று நெடுஞ்சாலை பயண செயலியான, 'ராஜ்மார்க் யாத்ரா'வில் உருவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை கமிஷன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் போன்ற இணையதளங்களிலும், இந்த இணைப்பு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டாயமில்லை
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், 'ஏற்கனவே பாஸ்டேக் வைத்திருப்போர், புதிய பாஸ்ட் டேக் வாங்க வேண்டிய அவசியமில்லை.
'ஆக., 15க்கு பின், சுங்கச்சாவடிகளில் பழைய பாஸ்டேக் திட்டத்தை காட்டி புதிய நடைமுறைக்கு புதுப்பித்து கொள்ளலாம். புதிய நடைமுறை கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால், விரும்புவோர் மட்டும் இந்த நடைமுறைக்கு மாறலாம்' என, தெரிவித்துள்ளது.