நீட் தேர்வு குறித்து விவாதம்: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்
நீட் தேர்வு குறித்து விவாதம்: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்
நீட் தேர்வு குறித்து விவாதம்: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்
ADDED : ஜூலை 02, 2024 05:30 PM

புதுடில்லி: ‛‛ மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அதனை நீங்கள் தலைமையேற்று நடத்த வேண்டும் '' என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது : நீட் தேர்வு குறித்து பாரலிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் எனக்கூறி இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த 28 ம்தேதி எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கை பார்லிமென்டின் இரு அவைகளிலும் ஏற்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்றும், நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது குறித்து அரசுடன் விவாதிப்பதாக சபாநாயகர் உறுதி அளித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதும் 24 லட்சம் மாணவர்களின் நலன்களே எங்களது கவலையாக உள்ளது. தங்கள் குழந்தைகளுக்காக லட்சகணக்கான குடும்பங்கள் தியாகம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என, மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களிடம், அந்த மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
நீட் தேர்வு குறித்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை கேள்வித்தாள் கசிந்துள்ளது. இதனால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய தேர்வு அமைப்பின் தோல்வியை மூடி மறைக்கவே, தேர்வு ஒத்திவைப்பு மற்றும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
நமது மாணவர்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பார்லிமென்டில் விவாதம் நடத்துவது முதல் வழி. அவசரத்தை புரிந்து கொண்டு, நாளை, நீட் தேர்வு விவாதத்திற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களின் நலன் கருதி, இந்த விவாதத்தை நீங்கள் தலைமையேற்று நடத்தினால், அது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.