ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி
ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி
ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி

ஜாமினில்
லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: லோக்சபாவில் நேற்று ராகுல் குழந்தை தனமாக நடந்துகொண்டார்; குழந்தை போல அழுதார். சிறுபிள்ளைத் தனமான ராகுலின் செயல் பார்லியின் அனைத்து வரைமுறைகளையும் கடந்து விட்டது. குழந்தைத்தனமான புத்தி தான் லோக்சபாவில் ஒருவரை திடீரென கட்டிபிடிக்கும், கண்ணடிக்கும். மக்களிடம் அனுதாபத்தை பெற புதிய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றியுள்ளது. ராகுல் ஜாமினில் தான் வெளியில் உள்ளார் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் ராகுலை மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தியது. ஓபிசி.,யினரை அவமதித்ததற்காக ராகுல் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் ராகுல். குழந்தை போல் நடந்து கொள்கிறார் என்பதற்காக ராகுலை மன்னித்துவிட முடியாது.
அனைத்திலும் பொய்
லோக்சபாவில் பொய்யான கருத்துகளை கூறி அவையை தவறாக வழிநடத்த முயன்றார். குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுப்பதில்லை, அக்னிபத், இட ஒதுக்கீடு, ரபேல் எல்ஐசி, அரசியல்சாசனம், மின்னணு ஓட்டு இயந்திரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் பொய்யை மட்டுமே கூறி இருக்கிறது காங்கிரஸ்.
பொய் வாக்குறுதிகள்
அனைத்து தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ராகுல். நாட்டின் பெண்கள், சகோதரிகளுக்கு மாதம் ரூ.8500 வழங்குவதாக பொய் கூறியது. இந்த பொய் வாக்குறுதிகளை சில சகோதரிகள் நம்பினர். அக்கட்சி கொடுத்த பொய் வாக்குறுதிகளே காங்கிரசை வந்து கடிக்க போகிறது. சகோதரிகள் தாய்மார்களின் சாபம் காங்கிரசை தாக்கும்.நேற்று நடந்த விஷயத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.ராகுலால்ஆட்சி அமைத்து விட முடியாது.
சர்வாதிகாரம்
காங்கிரசின் நோக்கங்கள் மிகவும் அபாயகரமானவை. சர்வாதிகாரத்தை மக்கள் மீது வலுக்கட்டாயமாக காங்கிரஸ் திணித்தது. கொடூரத்தின் அடையாளமாக காங்கிரஸ் விளங்கி வருகிறது. அதிகாரப்பசியினால் நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. ஊடகங்கள் முடக்கப்பட்டன. அரசியல்சாசனம் ஒடுக்கப்பட்டது.ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்கினர்.
அநீதி
அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையை முடக்க நேரு முழு முயற்சியையும் மேற்கொண்டார். தலித்களுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்ததால் தான் நேரு அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் விலகினார். தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான ஜகஜீவன் ராமுக்கும் அநீதி இழைத்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி எப்போதுமே இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி தான்
ஹிந்து மதம் காரணம்
தனது பேச்சின் போது நாட்டின் கோடிக்கணக்கான ஹிந்துக்களை ராகுல் அவமதித்தார். ஹிந்துக்கள் சகிப்புத்தன்மைக்கு ஆதரவாக உள்ளனர்.100 ஆண்டுகள் ஆனாலும் காங்.,கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக ராகுலை ஹிந்துக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜனநாயகம் தழைத்து ஓங்குவதற்குக் ஹிந்து மதம் தான் காரணம். ஹிந்துக்களை வன்முறையாளர்களாக மாற்ற காங்., சதி செய்கிறது. ஹிந்துக்கள் எப்போதும் வன்முறையாளர்களாக இருந்தது இல்லை.ஹிந்து பயங்கரவாதம் என்ற சொல்லை கண்டுபிடித்ததே காங்., தான். சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதற்காக ஹிந்து கடவுளை காங்., அவமதித்தது. ஹிந்துக்களை அவமதிப்பதை காங், பேஷனாக கருதுகிறது.
சனாதன தர்மம்
சனாதன தர்மத்தை அவமதித்தது காங்., கூட்டணி கட்சியான திமுக.,காங்.,கட்சியின் கூட்டாளிகள் சனாதனத்தை டெங்கு மலேரியா நோய்களுடன் ஒப்பிட்டனர். கூட்டாளிகள் சனாதனத்தை ஒழிப்பது பற்றி பேசிய போது கைதட்டி காங்., கட்சியினர் ஆதரித்தனர்.தேர்தலுக்கு முன்பாக ராகுல் சக்தியை அழிப்பது பற்றி ராகுல் பேசினார்.
ராணுவ சீர்திருத்தம்
ஒரே பதவி,ஒரே ஓய்வூதிய திட்டத்தை காங்., எதிர்த்தது. தேஜ கூட்டணி தான் அமல்படுத்தியது. எந்த சூழலிலும் எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ராணுவத்தை வலிமையாக்க நாங்கள் முயன்று வருகிறோம். ராணுவத்திலும் சுயசார்பை எட்டுவது தான் எங்கள் இலக்கு பாதுகாப்பு துறையில் நாடு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. ராணுவத்தினர் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
வினாத்தாள் கசிவு
நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் கசிவை தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. வினாத்தாள் கசிவு குற்றவாளிகள் அரசு தப்ப விடாது என உறுதிபட கூறுகிறேன். மாணவர்கள் எதிர்காலத்தில் சமரசம் செய்தவர்கள் ஒருக்காலும் தப்பிக்க முடியாது என உறுதிபடக் கூறுகிறேன். மாணவர்களின் கல்வியில் விளையாடுபவர்கள் தண்டிக்கப்படுவர்.
பிரார்த்தனை
தேர்தல் முடிந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு தங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். வளர்ச்சி அடைந்த நாடாக பாரதத்தை மாற்றுவதற்கு அனைத்து எம்.பி.,க்களும் உதவிகரமாக இருக்க வேண்டும். நேர்மறையான அரசியல் இன்றைய கால கட்டத்தில் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க எதிர்க்கட்சியினர் என்னுடன் இணைந்து செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மையுடன் பாடுபட வேண்டும்.