தேஜஸ் போர் விமான இன்ஜின் 2 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு
தேஜஸ் போர் விமான இன்ஜின் 2 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு
தேஜஸ் போர் விமான இன்ஜின் 2 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு
ADDED : மார் 27, 2025 02:52 AM

புதுடில்லி : தேஜஸ் போர் விமானத்திற்கான முதல் இன்ஜினை, இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்கு பின் அமெரிக்க நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
நம் ராணுவத்துக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களை தயாரிக்க, கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ஹெச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்துடன், 2021ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த விமானத்தின் இன்ஜினை, அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் வடிவமைத்து தர ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதற்கிடையே, புதிய இன்ஜின்களை ஒப்படைப்பதில் அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தியதால், ஒப்பந்தத்தின்படி இதுவரை நம் விமானப்படையிடம் தேஜஸ் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல்., நிறுவனம் ஒப்படைக்கவில்லை.
இதை, நம் விமானப்படையின் தலைமை தளபதி வெளிப்படையாகவே பல முறை கூறியிருந்தார். சமீபத்தில், அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசியபோது, தேஜஸ் போர் விமான உற்பத்தி தாமதம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிலையில், தேஜஸ் போர் விமானத்திற்கான முதல் இன்ஜினை, அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், ஹெச்.ஏ.எல்., நிறுவனத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தது.
இதுகுறித்து ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'எங்களிடம் இன்ஜின் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், விரைவில் உற்பத்தியை துவக்கி, நம் விமானப் படையிடம் மேம்படுத்தப்பட்ட தேஜஸ் போர் விமானங்களை அளிப்போம்.
'ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2028ம் ஆண்டுக்குள் போர் விமானங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்போம். இதற்காக, உற்பத்தி திறனை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம்' என்றார்.