'பெண்டானில்' ரசாயனம் கடத்தல்: இந்தியா மீது பழிபோடும் அமெரிக்கா
'பெண்டானில்' ரசாயனம் கடத்தல்: இந்தியா மீது பழிபோடும் அமெரிக்கா
'பெண்டானில்' ரசாயனம் கடத்தல்: இந்தியா மீது பழிபோடும் அமெரிக்கா
ADDED : மார் 27, 2025 03:05 AM

வாஷிங்டன் : அமெரிக்காவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருள் தயாரிப்புக்கான, 'பெண்டானில்' ரசாயன கடத்தலில் சீனாவும், இந்தியாவும் முன்னிலையில் இருப்பதாக, அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெண்டானில் எனப்படும் ரசாயனக் கலவை, வலி நிவாரணியாக வழங்க அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செயற்கை போதையை உருவாக்கக் கூடியது. கடினமான அறுவை சிகிச்சைகள் போன்றவற்றில், மயக்க மருந்தாகவும், வலி நிவாரணியாகவும் இதைப் பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அதே நேரத்தில், சற்று அளவு கூடினால், போதைப் பொருளாக மாறி, அதற்கு மக்கள் அடிமையாகிவிடுவர். போதைப் பொருள்கள் தயாரிக்கும் குழுக்கள், இதை ஒரு போதைப் பொருளாக மாற்றியுள்ளன. இது பொடி அல்லது மாத்திரையாக விற்கப்படுகிறது.
பெண்டானில் தயாரிப்பதற்கான ரசாயனங்கள், அமெரிக்க போதைப் பொருள் கடத்தல் கும்பல்களால், சீனாவில் இருந்தே அதிக அளவில் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அமெரிக்காவில், கடந்தாண்டு அக்டோபர் வரையிலான, 12 மாதங்களில், பெண்டானில் போதைப் பொருளை அதிகளவில் எடுத்துக் கொண்டதால், 52,000 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இந்த போதைப் பொருளை ஒழிப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இந்த ரசாயனப் பொருளை தயாரிக்கும் சீனா மீது கூடுதல் வரியை விதிப்பதாக அவர் அறிவித்தார். மேலும், இந்தப் போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறியதாக, அண்டை நாடுகளான, கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரியை அறிவித்துள்ளார்.
இந்நிலையில், துளசி கப்பார்ட் தலைவராக உள்ள அமெரிக்க தேசிய உளவுப் பிரிவு, ஆண்டு அச்சுறுத்தல்கள் கணிப்பு என்ற பெயரில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதில், அமெரிக்காவுக்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், பெண்டாலின் தயாரிப்புக்கான ரசாயனங்கள் சீனா மற்றும் இந்தியாவில் இருந்தே அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
முதல் முறையாக இந்தியா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்தியாவைச் சேர்ந்த சில போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக, நாட்டின் மீதே முதல் முறையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்தியா அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அதே அளவு வரி விதிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார். இந்நிலையில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதனால், இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.