Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/2029 தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்: பிரதமர் மோடி கணிப்பு

2029 தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்: பிரதமர் மோடி கணிப்பு

2029 தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்: பிரதமர் மோடி கணிப்பு

2029 தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்: பிரதமர் மோடி கணிப்பு

UPDATED : ஜூலை 02, 2024 06:46 PMADDED : ஜூலை 02, 2024 05:40 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ''எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறு தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். அங்கேயே காங்கிரஸ் தொடர்ந்து அமர்ந்து கொண்டிருக்கும். 2029ல் தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்'' என லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த காலங்களில் ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 10 பைசா தான் கிடைத்தது. காங்கிரஸ் வெட்கமின்றி ஊழலுக்கு ஒப்புவித்து கொண்டன. ஒரு ஊழலை மறைக்க இன்னொரு ஊழல் செய்தனர். ஐ.மு., கூட்டணி ஆட்சியின் மீது மக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிட்டனர்.

ஊழல் சகாப்தம்


காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடந்த ஊழலின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நம்பிக்கை இழந்த சூழலில் நாட்டை எங்கள் அரசு மீட்டுள்ளது. ஊழல் ராஜ்ஜியங்கள் ஒழிக்கப்பட்டு விட்டன. காஸ் சிலிண்டர் இணைப்பை பெறக் கூட எம்.பி.,க்களின் சிபாரிசு பெற வேண்டிய நிலை முந்தைய ஆட்சியில் இருந்தது. 2014 வரை ஊழல் எப்படி செய்வது என்று போட்டி இருந்தது. அப்போதெல்லாம் ஊழல்கள் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. 2014க்கு பிறகு இந்தியாவின் மாற்றத்தை மக்கள் பார்க்கத் துவங்கினர்.

5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது எங்களின் அரசு தான். செய்ய முடியாத காரியங்களையும் நாங்கள் செய்து காட்டினோம். பயங்கரவாதத்தை துல்லிய தாக்குதல் மூலம் முறியடித்தோம். ஐ.மு கூட்டணி ஆட்சியில் நாட்டின் வளத்தை தங்களின் சொத்து போல கொள்ளையடித்தனர். ஓட்டுகளுக்காக ஜம்மு காஷ்மீரில் வைக்கப்பட்டிருந்த 370வது பிரிவை, நாங்கள் நீக்கினோம். 370வது பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் வளர்ச்சி காணப்படுகிறது. அங்கு பயங்கரவாதம் குறைந்து, ஜனநாயகம் தழைத்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு அவர்களின் கண்முன் தகுந்த பாடம் புகட்டப்பட்டது.

3 மடங்கு வேகம்


வளர்ச்சி தொடர்பான எங்களின் சாதனைகளை நாங்களே முறியடித்து வருகிறோம். எங்கள் வேகத்தை மிஞ்சுவதற்கு தற்போது நாங்கள் முயன்று வருகிறோம். 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம். 3வது இடத்திற்கு முன்னேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம். கோடிக்கணக்கான சகோதரிகள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். 3வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள நாங்கள், 3 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்.

தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு ஏராளமான ஓட்டுகள் கிடைத்தன. அங்கு பல இடங்களில் 2வது இடத்தை பெற்றுள்ளோம். கேரளாவில் முதன்முறையாக பா.ஜ.,வுக்கு எம்.பி., பதவி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஆதரவு இல்லாத பல மாநிலங்களில் கூட தற்போது எங்களுக்கு அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.

எதிர்க்கட்சி வரிசை


எதிர்க்கட்சி வரிசையில் அமருமாறு தான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தீர்ப்பளித்தனர். அங்கேயே காங்கிரஸ் தொடர்ந்து அமர்ந்து கொண்டிருக்கும். 3 தேர்தல்கள் நடந்தும் காங்கிரசால் ஆட்சியமைக்க முடியாமல் தோற்று போயுள்ளது. எங்களை தோற்கடித்துவிட்டது போன்ற மாயையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. தோல்விக்கு பின் அக்கட்சி சுயபரிசோதனை செய்து ஆராய வேண்டும். காங்கிரசால் விவாதிக்க முடியாத போதெல்லாம் தொடர்ந்து கூச்சிட்டு கொண்டிருப்பர். 2029ல் தேர்தலிலும் காங்., எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்.

Image 1288403


543க்கு 99


தங்களுக்கு கிடைத்த தோல்வியை காங்., கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. 1984க்கு பிறகு அக்கட்சி ஒருமுறை கூட 250 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. தேர்தல்களில் தோல்வி அடைவதில் உலக சாதனை படைத்திருக்கிறது காங்கிரஸ். 543 தொகுதிகளில் 99 இடங்களை வென்ற காங்கிரஸ், 100க்கு 99 இடங்களில் வென்றதுபோல் மக்களை ஏமாற்றுகிறது. 13 மாநிலங்களில் காங்., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் அவர்கள் ஹீரோ போன்று நடந்து கொள்கிறார்கள்.

ஒட்டுண்ணி கட்சி


எங்கெல்லாம் அவர்கள் தனியாக போட்டியிட்டார்களோ அங்கெல்லாம் அவர்களின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. 64 தொகுதிகளில் தனித்துபோட்டியிட்டு 2ல் மட்டுமே வென்றுள்ளனர். கூட்டணி கட்சிகள் இல்லை என்றால், காங்கிரஸ் பூஜ்ஜியம். ஒட்டுண்ணி போல ஊடுருவி, கூட்டணி கட்சிகளையும் சேர்த்து அழித்து வருகிறது. இனி அக்கட்சி ஒட்டுண்ணி கட்சி என அழைக்கப்படும்.

வட மாநிலங்களுக்கு தெற்கிலும், தெற்குக்கு எதிராக வடக்கிலும் பேசி வருகிறது காங்கிரஸ். சமூகங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறது. நாட்டை துண்டாட நினைப்பவர்களுக்கு அக்கட்சியில் இடமளிக்கப்படுகிறது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் நாட்டின் பொருளாதாரத்தை எரித்துவிடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நீதி வேண்டும்

பிரதமர் மோடி உரையாற்றியபோது 'மணிப்பூர், நீட் விவகாரத்தில் நீதி வேண்டும்' என்றும், 'நீட் வேண்டாம்' என்றும், 'கொல்லாதே கொல்லாதே மாணவர்களை கொல்லாதே, மாணவர்களை காப்பாற்று' எனவும் தமிழக எம்.பி.,க்கள் தமிழில் முழக்கமிட்டனர். மற்ற எதிர்க்கட்சியினரும் பிரதமரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முழக்கமிட்டனர். 'எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றனர். எதிர்க்கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரித்தார்.



அமைதியான ராகுல்

பிரதமர் மோடியின் பதிலுரையின்போது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கூச்சலிட்டபோதும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அமைதியாக பிரதமரின் பேச்சை கேட்டு வந்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us