கடலில் கவிழ்ந்த லைபீரியா கப்பல் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
கடலில் கவிழ்ந்த லைபீரியா கப்பல் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
கடலில் கவிழ்ந்த லைபீரியா கப்பல் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 11, 2025 09:18 PM

கொச்சி: கேரளாவின் கொச்சி அருகே நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான லைபீரியா நாட்டு கப்பலின் உரிமையாளர் மற்றும் மாலுமிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழிஞ்ஞம் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, கடந்த மே 24ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு இந்த கப்பல் புறப்பட்டது. கொச்சியிலிருந்து 70 கி.மீ., துாரத்தில் நடுக்கடலில் திடீரென கப்பல் கவிழ்ந்தது.
கப்பலில் 640 கன்டெய்னர்கள் எடுத்துச் செல்லப்பட்டது. அதில், 13 கன்டெய்னர்களில் மிகவும் ஆபத்தான பொருட்களும், 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், 84.44 மெட்ரிக் டன் டீசலும், 367.1 மெட்ரிக் டன் எண்ணெயும் கொண்டு செல்லப்பட்டது.
இந்த விபத்தில் கப்பலில் இருந்த எண்ணெய், டீசல் மற்றும் கால்சியம் கார்பைடு ஆகியவை கடலில் கலந்தன. எனவே, மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த கப்பல் விபத்தினால் கடலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், மீனவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆலப்புழாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில், கப்பல் உரிமையாளர் மற்றும் மாலுமிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதாவது, கப்பலை கவனக்குறைவாக இயக்குதல், பொது பயன்பாட்டு வழியில் அபாயத்தை உருவாக்குதல், நச்சுப் பொருட்களை எடுத்துச் செல்வதில் அலட்சியம், தீ மற்றும் வெடிபொருட்களை எடுத்துச் செல்வதில் கவனக்குறைவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, கப்பலை இயக்கியவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதில் கேரள அரசு தாமதம் காட்டி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.