மூக்கு முட்ட குடிக்க அனுமதித்தது ஏன்? மிஹிர் ஷா கார் விபத்து வழக்கில் விதிமீறல்
மூக்கு முட்ட குடிக்க அனுமதித்தது ஏன்? மிஹிர் ஷா கார் விபத்து வழக்கில் விதிமீறல்
மூக்கு முட்ட குடிக்க அனுமதித்தது ஏன்? மிஹிர் ஷா கார் விபத்து வழக்கில் விதிமீறல்
UPDATED : ஜூலை 12, 2024 01:18 PM
ADDED : ஜூலை 12, 2024 01:03 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், மது அருந்த அனுமதியில்லாத நிலையில் சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா 23 வயதாக இருக்கும்போதே மது அருந்த அனுமதிக்கப்பட்டது எப்படி, அதிகளவு மது அருந்திவிட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் நடந்தது என்ன என போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த 7ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த தம்பதிகள் மீது அந்த வழியில் அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) காரில் சிக்கியபடி சிறிது தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார். இதில் படுகாயமடைந்த நகாவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில், இந்த காரை ஓட்டி வந்தது ஆளும் ஷிண்டே சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா என்பது தெரியவந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய பின்னர் அவர் தலைமறைவானார். காரின் உரிமையாளரான ராஜேஷ் ஷா, கார் ஓட்டுனர் மற்றும் இதில் தொடர்புடைய மற்றொருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மிஹிர் ஷாவையும் போலீசார் கைது செய்தனர்.
விபந்து நடப்பதற்கு முன் மிஹிர் ஷா அதிகளவு மதுபானம் குடித்தது தெரியவந்துள்ளது. போலீஸ் தரப்பு கூறியதாவது: மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ள பாரில் மிஹிர் ஷா மற்றும் அவரது இரு நண்பர்களும் மது அருந்த சென்றுள்ளனர். அங்கு 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது வழங்க அனுமதி இல்லாத நிலையில், 23 வயதான மிஹிர் ஷா மது குடிக்க அனுமதிக்கப்பட்டது ஏன் என விசாரிக்கப்பட்டது. அதில், மிஹிர் ஷா காண்பித்த ஐடி கார்டில் தன்னுடைய வயது 27 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், அவருடைய நண்பர்களின் வயது 30 எனவும் குறிப்பிட்டிருந்ததால் மது வழங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த பாரின் 3500 சதுர அடி அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டதை அறிந்து மாநகராட்சி நிர்வாகம் தற்போது இடித்துள்ளது. அந்த பாரில் சம்பவம் நடப்பதற்கு முன்பு மிஹிர் ஷா மற்றும் அவரது இரு நண்பர்கள் என மூவரும் 12 லார்ஜ் விஸ்கி மது அருந்தியுள்ளனர். அதாவது ஒவ்வொருவரும் 4 லார்ஜ் மது குடித்துள்ளனர். பிறகு நள்ளிரவு 1:30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காரில் வந்துள்ளனர். மது அருந்தி 4 மணி நேரத்திற்குள் அதிகாலை 5 மணியளவில் விபத்தை ஏற்படுத்தி தப்பியுள்ளனர்.
மது அருந்தினால் சுமார் 8 மணி நேரத்திற்கு போதை இருக்கும் நிலையில், மூக்கு முட்ட குடித்துவிட்டு காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியுள்ளனர் இவர்கள். உயிரிழந்த பெண்ணை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை காரில் இழுத்து சென்றுள்ளனர். விபத்து நடந்ததும் மிஹிர் ஷா, தனது காரை ஓட்டுனரிடம் வழங்கிவிட்டு வேறொரு வாகனத்தில் தப்பியுள்ளார். தப்பி ஓடிய மிஹிர் ஷா ஜூலை 9ல் கைது செய்யப்பட்டார். அவரை ஜூலை 16ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதித்தது. இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.