சிதம்பரம் கோயில் கனகசபையில் நின்று சுவாமி தரிசனம் செய்யலாமா: கோர்ட் உண்மையில் சொன்னது என்ன?
சிதம்பரம் கோயில் கனகசபையில் நின்று சுவாமி தரிசனம் செய்யலாமா: கோர்ட் உண்மையில் சொன்னது என்ன?
சிதம்பரம் கோயில் கனகசபையில் நின்று சுவாமி தரிசனம் செய்யலாமா: கோர்ட் உண்மையில் சொன்னது என்ன?
ADDED : ஜூலை 12, 2024 01:09 PM

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக பொய் செய்திகள் பரவி வருகிறது என கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறியுள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்தாண்டு ஆனி திருமஞ்சன தரிசன உற்சவத்தின்போது, கனகசபை மீதேறி தரிசனம் செய்வதை தீட்சிதர்கள் தடை செய்தனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், கனகசபையில் ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்தனர்.
இதனிடையே இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றி சில மீடியாக்களில் பொய் செய்தி பரவியது.
இதனை மறுத்து கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: தற்போது பெரிய திருவிழா நடக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி இரண்டு நாட்களாக தமிழக மீடியாக்களில் பொய் செய்திகள் பரவி வருகின்றன. திருவிழாவை காரணம் காட்டி, கருவறை அருகே பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதித்தால், பொது தீக்ஷிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஹிந்து சமய அறநிலையத்துறைக்கும் போலீசுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொய் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இதுபோன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
ஆனால், இது குறித்து வெட்கக்கேடான சில தொலைக்காட்சி ஊடகங்கள், செய்தித்தாள்களில் பொய்ச்செய்திகள் பரப்பப்பட்டன. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எந்த அறிக்கையையும் கேட்கவில்லை. ஊடகத்திற்கு ஹிந்து விரோத நிகழ்ச்சி நிரல் இருந்தாலோ அல்லது ஹிந்து சமய அறநிலையத்துறையின் கைகூலியாக இருந்தாலோ அன்றி, ஒருவர் பழங்கால ஹிந்து கோயில்கள் தொடர்பான பொய் செய்திகளை வெளியிட மாட்டார்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.