நீதிபதி வீட்டில் சிக்கிய பண விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
நீதிபதி வீட்டில் சிக்கிய பண விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
நீதிபதி வீட்டில் சிக்கிய பண விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
ADDED : மார் 27, 2025 01:51 AM

புதுடில்லி : டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த விவகாரத்தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில், கடந்த 14-ம் தேதி இரவு திடீரென தீப்பிடித்தது. அதை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் சென்றபோது, ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் சிக்கியதாக வெளியான தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சந்தேகம்
இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் பணிபுரிந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
மேலும், நீதிபதியின் வீட்டில் விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக 3 பேர் குழுவை கடந்த 22ம் தேதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமித்தார்.
எனினும், தன் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு யஷ்வந்த் வர்மா மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியது தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மாத்யூஸ் நெடும்பரா மற்றும் 3 பேர் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 'உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன் அனுமதியின்றி கிரிமினல் நடவடிக்கைகளை துவங்க முடியாது என, கடந்த 1991-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பரிசீலனை செய்ய வேண்டும்,' எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கும்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் வழக்கறிஞர் மாத்யூஸ் நேற்று நேரில் முறையிட்டார்.
அவர் வாதிடுகையில், “பணத்துக்கு சம்பந்தம் இல்லை என நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறுவதை நம்புவதாக இருந்தாலும் சில கேள்விகள் எழுகின்றன.
''எப்.ஐ.ஆர்., ஏன் இன்னும் பதிவாகவில்லை? யாரும் ஏன் கைதாகவில்லை? இந்த விவகாரம் பகிரங்கமாக தெரிவதற்கே ஒரு வார காலம் ஆனதால், ஏதேனும் மூடி மறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது,” என்றார்.
ஆய்வு
உடனே குறுக்கிட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, “பொத்தாம் பொதுவாக கருத்துகளை வெளியிட வேண்டாம். இதுவரை கூறியதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மனு, முறையாக பட்டியலிடப்பட்டு, அதற்கேற்ற வரிசையில் விசாரணைக்கு வரும்,” என்றார்.
இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் டில்லி போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட போலீசார், நீதிபதியின் இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.