கை, கால்கள் கட்டப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்
கை, கால்கள் கட்டப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்
கை, கால்கள் கட்டப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்
ADDED : மார் 27, 2025 01:56 AM

சர்கி தாத்ரி: ஹரியானாவில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை உயிருடன் புதைத்து, கொடூரமாக கொன்ற நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஹரியானாவின் சர்கி தாத்ரி பகுதியைச் சேர்ந்தவர் ஜக்தீப். இவர் ரோஹ்தக்கில் உள்ள தனியார் பல்கலையில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஹர்தீப் என்பவரின் வீட்டில் குடியிருந்த ஜக்தீப், அவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, பணியில் இருந்து வீடு திரும்பும் போது ஜக்தீப் மாயமானார். இது குறித்து அவரின் குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில், மர்ம நபர்களால் ஜக்தீப் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, கடந்த மூன்று மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஜக்தீப்பின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புகளை சோதனை செய்த போலீசார், ஜக்தீப் வீட்டு உரிமையாளர் ஹர்தீப் மற்றும் அவரின் கூட்டாளி தரம்பால் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், இருவரும் சேர்ந்து ஜக்தீப்பை கடத்திக் கொன்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஹர்தீப் மனைவியுடன் ஜக்தீப் தகாத உறவு வைத்திருந்தார். இது குறித்து பலமுறை கண்டித்தும் அந்த உறவை கைவிட ஜக்தீப் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹர்தீப், தன் கூட்டாளி தரம்பால் உடன் இணைந்து, கடந்த டிசம்பரில் ஜக்தீப்பை கடத்தினார். அவரின், கை, கால்களை கயிறுகளால் கட்டியதுடன், வாயில் டேப் போட்டு ஒட்டினார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வயல்வெளி பகுதிக்கு ஜக்தீப்பை துாக்கிச் சென்ற இருவரும், 7 அடி பள்ளம் தோண்டி உயிருடன் அவரை புதைத்தனர். ஜக்தீப்பின் உடலை எரிக்கவும் அவர்கள் முயன்றனர்.
இருவரும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்று ஜக்தீப்பின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே முழு விபரம் தெரிய வரும். இவ்வாறு போலீசார் கூறினர்.