Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு

பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு

பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு

பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு

UPDATED : மே 10, 2025 06:18 PMADDED : மே 10, 2025 11:25 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''பாக்., ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்பாதீர்கள். அவர்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்,'' என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.



இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தான் பாக்., எடுத்து வருகிறது; பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் வதந்திகளை பரப்புகிறது.

எல்லை பகுதியில் ராணுவத்தை பாகிஸ்தான் அதிக அளவில் குவித்து வருகிறது.

இந்திய ஆயுதப்படைகள் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பது தான் பாகிஸ்தானின் நோக்கம். பாகிஸ்தான் இன்று அதிகாலை அதிவேக ஏவுகணைகளை கொண்டு பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க முயன்றது. மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது.

இந்திய மக்கள் தங்கள் அரசாங்கத்தை குறை கூற வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். குடிமக்கள் தங்கள் சொந்த அரசாங்கத்தை விமர்சிப்பதைப் பார்ப்பது பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஜனநாயக நாட்டில் மட்டும் இது நடக்கும்.

இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஜம்முவில் உள்ள ஷம்பு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தனது விரோதப் போக்கை தொடர்ந்தது. இரவு முழுவதும் பல ஆயுதம் ஏந்திய டிரோன்கள் அனுப்பி, பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேட்டி


கர்னல் சோபியா குரேஷி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான், அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி விமானப்படை தளத்தை தகர்க்க முயற்சி மேற்கொண்டது. மருத்துவமனை, பள்ளிகளிலும் தாக்குதல் நடத்தியது. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பது அவர்களது நோக்கம்.

ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. மிகுந்த கவனத்துடன் பதிலடி கொடுத்து வருகிறோம். எஸ்-400 பாதுகாப்பு கவசம் தாக்கப்படவில்லை. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. பாகிஸ்தான் தனது வான் பரப்பை தவறாக பயன்படுத்துகிறது.

அத்துமீறல்


எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. சியால்கோட்டில் உள்ள ராணுவ தளம் மீது இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ரேடார் அமைப்புகள் தாக்கப்பட்டன. பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை சீண்டுகிறது. பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வியோமிகா சிங் பேட்டி


விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது: இந்திய விமான தளங்கள் உள்ள உதம்பூர், பதான்கோட் பகுதிகளில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதிகளை மட்டுமே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

விமானதளம் அழிக்கப்பட்டதாக பாக்., ஊடகங்களில் பொய் கூறுகிறது. விமான தளம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தியாவின் சூரத்கர் விமானப்படை தளம் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்கும் வகையில், 'டைம்ஸ்டாம்ப்' உடன் கூடிய படங்களை, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

போர் நிறுத்தம்

இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us