Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்

பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்

பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்

பீஹார் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அமலாகும் புதிய சீர்திருத்தங்கள்

Latest Tamil News
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பல ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன. மற்றவை தேர்தலின் போது அமல்படுத்தப்பட உள்ளது என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.

தேர்தல் கமிஷனின் சில சீர்திருத்த நடவடிக்கைகள்:

ஓட்டுச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள்


பீஹாரில் முதல்முறையாக ஒரு ஓட்டுச்சாவடியில் 1,200 வாக்காளர்கள் என்ற முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஓட்டுப்போடுவது எளிதாக இருப்பதுடன், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருக்காது. முன்பு ஒரு ஓட்டுச்சாவடிக்கு 1,500 வாக்காளர்கள் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி காரணமாக இந்த எண்ணிக்கை 1,200 ஆக குறைய உள்ளது. இதனால், பீஹாரில் தற்போதுள்ள 77,895 ஓட்டுச்சாவடிகளுடன் புதிதாக 12,817 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஓட்டுச்சாவடிகளில் கலர் படங்கள்


பீஹாரில் முதல்முறையாக மின்னணு ஓட்டு இயந்திரங்களில் எழுத்துக்கள் மற்றும் சீரியல் எண்கள் பெரிதாக பொறிக்கப்பட உள்ளதுடன், அதில் வேட்பாளர்களின் புகைப்படம் வண்ணப்படமாக ஒட்டப்பட உள்ளது. இதற்கு முன்னர், கருப்பு வெள்ளையில் இருந்த புகைப்படங்களால் சில வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார்.

அதிகாரிகளிடம் அடையாள அட்டை


பூத் மட்டத்திலான அதிகாரிகள் தங்களது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வைத்து இருப்பார்கள். இதன் மூலம், வாக்காளர்கள் அவர்களை அடையாளம் கண்டு எளிதில் அணுக முடியும்.

மொபைல்போன்கள் வைக்க தனி அறை


ஓட்டுப்போட வரும் வாக்காளர்கள் தங்களது மொபைல்போன்களை வைக்க தனி அறை ஏற்படுத்தப்படும். இது பீஹார் முழுவதும் அமல்படுத்தப்படும் என ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.

இணையவழி ஒளிபரப்பு


தேர்தலின் போது வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக பீஹார் முழுவதும் அனைத்து ஓட்டுச்சாவடிகளும் வெப் கேமரா பொருத்தப்படும்.

ஓட்டு எண்ணிக்கையில் தெளிவு


ஞானேஷ்குமார் கூறுகையில், முன்பு ஓட்டுகள் எண்ணப்படும் போது, தபால் ஓட்டு எண்ணிக்கையில் பிரச்னை ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் எண்ணி முடிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். தற்போது, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் கடைசி இரண்டு சுற்று எண்ணப்படுவதற்கு முன்னர், தபால் ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட வேண்டும் என்றார்.

பீஹாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us