கோல்கட்டாவில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது
கோல்கட்டாவில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது
கோல்கட்டாவில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் சட்டகல்லூரி மாணவி ஒருவரை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ஆர்.ஜி.கர்., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்குவங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஜூன் 25ம் தேதி நடந்ததாக மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மாணவி அளித்த புகார் படி, தற்போது சட்டகல்லூரி படித்து வரும் மாணவர்கள் 2 பேரும், முன்னாள் மாணவர் ஒருவரும் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
குற்றவாளிகள், பாலியல் பலாத்கார சம்பவத்தை மொபைல்போனில் படம் பிடித்ததுடன், இணையதளத்தில் கசிய விடுவோம் எனக்கூறி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, 3 பேரிடமும் மொபைல்போனை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் மாணவி கூறியதாவது: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா என்பவன், தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்யும்படியும் மிரட்டினான். இதனை மறுக்கவே, பெற்றோரை பொய் புகார் அளித்து சிறையில் அடைப்பேன் என மிரட்டினான். எனக்கு காதலர் உள்ளார் எனக் கூறியும் அவர்கள் ஏற்காமல் என்னை தாக்கி பலாத்காரம் செய்தனர். என்னை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கெஞ்சியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் சென்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்த மாநிலத்தில் எதுவும் நடக்கலாம். கடந்த ஆண்டு, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு ஜூனியர் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வர் இப்போது இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு பணம் வழங்குவார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.