ரூ.4.79 கோடி பறிப்பு பெங்களூரில் இருவர் கைது
ரூ.4.79 கோடி பறிப்பு பெங்களூரில் இருவர் கைது
ரூ.4.79 கோடி பறிப்பு பெங்களூரில் இருவர் கைது
ADDED : ஜூன் 11, 2025 07:01 AM

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக வயதான தம்பதியை மிரட்டி, 4.79 கோடி ரூபாய் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு தென்கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சாரா பாத்திமா நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரை சேர்ந்தவர் மஞ்சுநாத், 70. இவர், மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், 31 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் பெங்களூரில் குடியேறினார். அபார்ட்மென்டில் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் பெங்களூரின் மல்லேஸ்வரத்திலும், மகள் ஹெப்பாலிலும் வசித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் மஞ்சுநாத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர்கள், 'வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் வங்கிக் கணக்கில் சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
'இது தொடர்பாக அமலாக்கத் துறையினரும், சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உங்களை கைது செய்து, திஹார் சிறையில் அடைப்போம்' என்று மிரட்டினர். அத்துடன், 'வாட்ஸாப்'பில் போலி கைது வாரன்டையும் அனுப்பியுள்ளனர்.
'இதில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும்' என்றும் கூறியுள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரை அவ்வப்போது தம்பதிக்கு போன் செய்து, இரு வங்கிக் கணக்குகளில் 4.79 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை தம்பதி உணர்ந்தனர். இது தொடர்பாக, சி.இ.என்., எனும் குற்றம், பொருளாதாரம், போதை தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், தம்பதியை ஏமாற்றியது பெங்களூரை சேர்ந்த நாராயண் சிங் சவுத்ரி, 50, ஈஸ்வர் சிங், 48, என்பதை கண்டுபிடித்தனர். இருவரும் இலங்கையில் இருந்து பெங்களூருக்கு வருவது தெரியவந்தது.
இதன்படி, கெம்பே கவுடா விமான நிலையத்தில் வந்து இறங்கிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவருக்கும் சூதாட்டம் ஆடுவதில் ஆர்வம் இருந்துள்ளது. தம்பதியிடம் இருந்து பணத்தை பறித்த இருவரும், இலங்கை சென்று காசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.