குறுகிய நேரத்தில் அதிகனமழை; குளம்போல் மாறிய வாரணாசி
குறுகிய நேரத்தில் அதிகனமழை; குளம்போல் மாறிய வாரணாசி
குறுகிய நேரத்தில் அதிகனமழை; குளம்போல் மாறிய வாரணாசி
ADDED : செப் 14, 2025 07:05 AM

வாரணாசி: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் திடீரென பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. புராதன நகரமான வாரணாசி, காசி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஹிந்துக்களின் ஆன்மிக தலைநகராக விளங்கும் வாரணாசி தான் பிரதமர் நரேந்திர மோடியின் லோக்சபா தொகுதி.
தொடர்ந்து மூன்று முறை இந்தத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து, அந்த தொகுதி வளர்ச்சிக்காக பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட, கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியசின் பிரதமர் ராம்கூலாவுடன், வாரணாசியில் வைத்தே இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், திடீரென வாரணாசியில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. குறுகிய நேரத்தில் அதிக அளவில் பெய்த கனமழை காரணமாக, மழைநீர் பெருக்கெடுத் து வெள்ளம் போல சாலைகளில் ஓடியது.
இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்தனர். சாலையோரங்களில் இருந்த கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால், வர்த்தகம் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்ததால், அப்பகுதியே குளம் போல காட்சியளித்தது.