ADDED : ஜூன் 18, 2025 11:45 PM

ஓட்டு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்களை திருப்திபடுத்த, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு வழங்கும் இடஒதுக்கீட்டை ஆளும் திரிணமுல் காங்., அரசு தவறாக பயன்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரியினர் துவக்கி வைத்த அரசியலை, தற்போதைய ஆளுங்கட்சி பின்பற்றி வருகிறது.
சுவேந்து அதிகாரி, மே.வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,
விசாரணை நடத்துக!
ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், என் அரசியல் வளர்ச்சியை தடுக்க என், 'மொபைல் போனை' ஒட்டுக்கேட்டனர். என் கணவர் உட்பட நெருக்கமானோரின் மொபைல் போன்களையும் ஒட்டுக்கேட்டனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ஷர்மிளா, ஆந்திர மாநில தலைவர், காங்கிரஸ்
அமைதி காப்பது ஏன்?
'ஏர் இந்தியா' விமான விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் தொடர்ந்து அமைதி காப்பது ஏன்? ஏர் இந்தியா நிறுவனத்தின் பெரும்பாலான விமானங்களை பராமரிக்கும் பணிகளை, இந்த நிறுவனம் தான் மேற்கொள்கிறது.
பிரபுல் படேல், முன்னாள் மத்திய அமைச்சர், தேசியவாத காங்கிரஸ்