Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியா-பாக்., பிரச்னையில் மோடியின் மவுனம் கலைந்தது

இந்தியா-பாக்., பிரச்னையில் மோடியின் மவுனம் கலைந்தது

இந்தியா-பாக்., பிரச்னையில் மோடியின் மவுனம் கலைந்தது

இந்தியா-பாக்., பிரச்னையில் மோடியின் மவுனம் கலைந்தது

UPDATED : ஜூன் 19, 2025 10:01 AMADDED : ஜூன் 18, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''அமெரிக்காவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தான் பாகிஸ்தானுடன் நடந்த போரை இந்தியா நிறுத்திக் கொண்டது என்ற கருத்து உண்மையல்ல. இந்தியாவின் பிரச்னைகளில் வேறு நாடுகள் தலையிடவோ சமரசம் செய்யவோ நாங்கள் அனுமதித்தது இல்லை; இனியும் அனுமதிக்க மாட்டோம்” என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஹிந்து சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

அதையடுத்து, இந்திய எல்லைக்குள் ராணுவம் மற்றும் சிவிலியன் இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பதிலுக்கு, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. நான்கு நாட்களாக நீடித்த சண்டை, மே 10ல் திடீரென நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார்.

“போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் உங்கள் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் எச்சரித்தேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள்” என்று ட்ரம்ப் மார்தட்டினார்.

இந்த அறிவிப்பு இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. 'எந்த பிரச்னையிலும் வேறு நாட்டின் தலையீடை இதுவரை அனுமதிக்காத இந்தியா, முதல் முறையாக அமெரிக்காவிடம் அடிபணிந்து விட்டது' என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

''ட்ரம்ப் சொன்னது உண்மை அல்ல; பாகிஸ்தான் ராணுவ தளபதி தான் நமது தளபதியுடன் போனில் பேசி, போர் நிறுத்தம் செய்ய முன்வந்தார். பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்று, போரை நிறுத்த இந்தியா சம்மதித்தது” என்று மத்திய அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் விளக்கம் கூறினர். ஆனால், ட்ரம்ப் அதே கதையை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 13 முறை திரும்ப திரும்ப சொன்னதால், மத்திய அரசின் விளக்கம் எடுபடவில்லை.

பிரதமர் மோடி இதுகுறித்து எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்ததால், எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்கியது. மோடி அரசு அமெரிக்காவின் மிரட்டலுக்கு சரண்டர் ஆகிவிட்டதாக காங்கிரஸ் பொங்கியது.

இந்த நிலையில் தான், டிரம்புடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். கனடாவில் நடந்த 'ஜி - 7' மாநாட்டுக்கு அழைப்பாளராக மோடி சென்றிருந்தார். அங்கு ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், இஸ்ரேல்-ஈரான் போரை காரணம் காட்டி ட்ரம்ப் திடீரென அமெரிக்காவுக்கு திரும்பி சென்றதால், அந்த சந்திப்பு நடக்கவில்லை. இருவரும் தொலைபேசியில் உரையாடினர்.

இந்தியா திரும்பும் வழியில் வாஷிங்டனுக்கு வாருங்களேன் என ட்ரம்ப் அழைத்தார். ஏற்கனவே திட்டமிட்ட பயணங்கள் இருப்பதால், அது சாத்தியமில்லை என மோடி சொல்லி விட்டார். நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள் என அழைத்தார். ட்ரம்ப் இந்த ஆண்டு முடிவில் வருவதாக சொன்னார். அப்போது தான், ஆப்பரேஷன் சிந்தூர் பற்றியும், போர் நிறுத்தம் குறித்தும் ட்ரம்புக்கு மோடி பாடம் எடுத்தார்.

இது தொடர்பான இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறியதாவது:அதிபர் டிரம்புடன், பிரதமர் மோடி 35 நிமிடங்கள் உரையாடினார். ஆப்பரேஷன் சிந்தூருக்கு பிறகான முதல் உரையாடல் இது. அப்போது, இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில், அமெரிக்காவின் மத்தியஸ்தம் தொடர்பாகவும் எந்த மட்டத்திலும் பேச்சு நடக்கவில்லை என்பதை பிரதமர் மோடி, டிரம்பிடம் தெளிவாக எடுத்துரைத்தார்.

பாகிஸ்தான் பிரச்னையில் மூன்றாம் தரப்பு சமரசத்துக்கு இந்தியா ஒருபோதும் அனுமதித்தது இல்லை, இனி அனுமதிக்க போவதும் இல்லை. பாக்., மீண்டும் சீண்டினால் நிச்சயம் பதிலடி தரப்படும் என்பதையும் டிரம்பிடம் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும் என டிரம்ப் உறுதியளித்தார். இவ்வாறு விக்ரம் கூறினார்.

விளக்கம் கேட்கிறது காங்கிரஸ்

காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா தான் காரணம் என்றும், வர்த்தகத்தை நிறுத்திவிடுவேன் என சொன்னதும் இரு நாடுகளும் பணிந்து விட்டதாகவும் டிரம்ப் திரும்பத் திரும்ப சொன்னார். மொத்தம், 14 தடவை டிரம்ப் இப்படி கூறியும், அதற்கு மோடி எந்த பதிலும் சொல்லவில்லை; மறுக்கவும் இல்லை. இப்போது 37 நாட்களுக்கு பின், பிரதமர் வாய் திறந்துள்ளார்.
போருக்கு காரணமான பாகிஸ்தான் தளபதியை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் விருந்துக்கு அழைத்துள்ளார். அதற்கு மோடி அதிருப்தி தெரிவித்திருக்க வேண்டும். தொலைபேசியில் பேசியது குறித்து அதிகாரியின் அறிக்கையோடு இதை முடிக்க முடியாது. ட்ரம்பின் கருத்துக்கு மோடி, பார்லிமெண்டில் மறுப்பு தெரிவிக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, டிரம்புடன் பேசியது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு ரமேஷ் கூறினார்.



நீங்கள்தான் பெஸ்ட்; இத்தாலி பிரதமர் புகழாரம்

'ஜி - 7' மாநாட்டுக்கு வந்த, ஐரோப்பிய நாடான, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரை சந்தித்ததும் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கிய மெலோனி, 'நீங்கள் தான் 'பெஸ்ட்'; உங்களைப் போல மாற நான் முயற்சி செய்கிறேன்' என, கூறி சிரித்தார். அப்போது, பிரதமர் மோடியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பொதுவாக, மோடி - மெலோனி சந்திப்பு இணையத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். அந்த வகையில், இருவர் பெயரையும் இணைத்து 'மெலோடி' என்ற 'ஹேஷ்டேக்' உடன் வேகமாக பரவி வருகிறது.



ட்விட்டரில் தான் சண்டையா

மேக்ரானிடம் மோடி கிண்டல்!ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசுகையில், 'இப்போதெல்லாம் ட்விட்டரில்தான் சண்டையிடுகிறீர்களா?' என, நகைச்சுவையாக கேட்டார். மோடி கேட்டதன் உள் அர்த்தத்தை புரிந்து கொண்ட மேக்ரான், வாய் விட்டு சிரித்தார். இரு தலைவர்களும் அப்போது கட்டியணைத்துக் கொண்டனர்.

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - இம்மானுவேல் மேக்ரான் இடையே வார்த்தை மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பினரும், சமூகவலைதளத்தில் மாறி மாறி வசைபாடி வருகின்றனர். இதை தான் பிரதமர் மோடி, மேக்ரானிடம் நகைச்சுவையாக கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us